மூணு பால் தான் இருக்கு.. இந்திய வீரரின் கடைசி வார்த்தைகள்.. மைதானத்திலேயே முடிந்த வாழ்க்கை.. யார் இந்த ராமன் லம்பா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட்டில் மிக குறுகிய காலமே ஆடி, கிரிக்கெட் மூலமே தனது வாழ்க்கையும் முடித்துக் கொண்ட, இந்திய வீரர் ராமன் லம்பா பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணிக்காக, எம்பதுகளில் அறிமுகம் ஆனவர் ராமன் லம்பா. ஆஸ்திரேலிய அணிக்காக, தான் களமிறங்கிய முதல் ஒரு நாள் தொடரிலேயே, இரண்டு அரைச் சதம் மற்றும் ஒரு சதம் என அதிரடியாக ஆடினார்.

அது மட்டுமில்லாமல், தொடர் நாயகன் விருதையும் தன்னுடைய அறிமுக தொடரிலேயே தட்டிச் சென்றார். அதிரடி ஆட்டத்துடன் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் என அசத்திய ராமன் லம்பா, ஒரு திறன்மிக்க வீரராக ஆரம்ப காலத்தில் வலம் வந்தார். மேலும், ரஞ்சி கிரிக்கெட்டிலும், 53 சராசரியுடன் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள்

ஆனால், இது நீண்ட காலம் நிலைக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல, தனது திறமையை வெளிக் கொண்டு வர முடியாத காரணத்தால், இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போன காரணத்தினால், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், வெளிநாடுகளுக்கு சென்று, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்று வந்தார்.

கடைசி போட்டி

ஏதாவது ஒரு விதத்தில், தொடர்ந்து கிரிக்கெட்டில் தனது பங்களிப்பினை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட ராமன் லம்பாவிற்கு, ஆயுட்காலம் அந்த அளவில் நிலைத்து நிற்கவில்லை. வங்கதேசம் சென்றிருந்த ராமன் லம்பா, கிளப் போட்டி ஒன்றில் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ராமன், Forward Short leg திசையில் நிறுத்தப்பட்டார்.

கடைசி வார்த்தைகள்

பேட்ஸ்மேனுக்கு அருகே நின்று கொண்டிருந்ததால், சக ஃபீல்டர் ஒருவர், ஹெல்மெட் வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு, 'மூன்று பந்துகள் தானே இருக்கிறது. வேண்டாம்' என ராமன் லம்பா தெரிவித்துள்ளார். அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள் இவை தான். இதனைத் தொடர்ந்து, ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை, பேட்ஸ்மேன் வேகமாக அடிக்க, அது லம்பாவின் தலையில் பட்டு, கீப்பர் கைக்கு சென்று கேட்ச் ஆனது. இதனால், உடனடியாக சுருண்டு விழுந்த லம்பா, சில நிமிடங்களில் ஒன்றுமில்லை என எழுந்து நின்று கொண்டார்.

39 வயதில் மரணம்

ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் மயக்கம் அடைய, மைதானத்தில் இருந்து அவரை வெளியேற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு, அவர் கோமாவில் இருந்து மீளவில்லை. மூன்று நாட்கள் கழித்து, தன்னுடைய 39 ஆவது வயதில் மரணம் எய்தினார் ராமன் லம்பா.

இளமையாக இருந்த ராமன் லம்பா

45 வயது வரை கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என்பதில் அதிக விருப்பத்துடன் இருந்த ராமன் லம்பாவை, அவரின் விதி 39 வயதிலேயே அழைத்துக் கொண்டது. ராமன் லம்பா பார்ப்பதற்கு மிகவும் அழகாக, இளமையுடன் காணப்படுபவர். இவர் பற்றி, புகழ்பெற்ற பத்திரிக்கையாளர், விஜய் லோக்கப்பளி, 'லம்பா தன்னை எப்போதும் இளமையாக நினைத்திருந்தார். அதற்கேற்ற ஹேர் ஸ்டைல், உடைகள், இளம் வீரர்கள் பயன்படுத்தும் உடைகள் என அனைத்திலும் இளமை தான். அதனால் தானோ என்னவோ, இளமையாகவே தனது வாழ்க்கையையும் முடித்துக் கொண்டார்' என எழுதினார்.

ராமன் லம்பாவின் பிறந்த தினமான இன்று (ஜனவரி 2, 1962), இந்திய கிரிக்கெட் உலகில், மிக குறுகிய காலத்திலேயே பயணத்தை முடித்துக் கொண்டவரை, நாம் சிறிது நேரம் நினைவு கொள்வோம்.

RAMAN LAMBA, CRICKET, கிரிக்கெட், ராமன் லம்பா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்