‘அவங்களுக்கு நன்றி சொன்னா மட்டும் போதாது’!.. வீடு திரும்பியதும் ‘முதல்’ ஆளாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டெல்லி அணியின் ‘ஸ்டார்’ ப்ளேயர்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், வீடு திரும்பியதும் முதல் ஆளாக இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ தெரிவித்தது. இந்த தொடரில் விளையாடிய கொல்கத்தா அணியின் வீரர் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா, ஹைதராபாத் அணியில் விளையாடிய சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தொடரை ஒத்திவைக்கும் முடிவுக்கு பிசிசிஐ வந்தது. இதனால் ஒவ்வொரு அணியின் வீரர்களும் வீடு திரும்பி வருகின்றனர். அனைத்து வீரர்களும் அவர்களது வீடு திரும்ப தேவையான அனைத்து உதவிகளையும் பிசிசிஐ செய்து தருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் (380) அடித்த வீரர்களின் பட்டியலில் ஷிகர் தவான்தான் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வீடு திரும்பியதும் முதல் வேலையாக கொரோனா தடுப்பூசியை ஷிகர் தவான் செலுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நான் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். முன்கள பணியாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. முடிந்த வரை எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அதுதான் கொரோனாவை நாம் வீழ்த்த பெரிதும் உதவும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் வாங்க அவர் நிதியுதவி செய்தார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் வீரர்களில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் வீரர் ஷிகர் தவான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்