"இவர கண்டிப்பா 'டீம்'ல சேர்த்து இருக்கணும்.. 'இந்தியா' டீம் பண்ண தப்புக்கு கண்டிப்பா ஃபீல் பண்ணுவாங்க.." வருத்தப்பட்ட 'முன்னாள்' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், வரும் ஜூன் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக, இத்தனை நாட்கள் இந்தியாவில் பயோ பபுளில் இருந்த இந்திய வீரர்கள், நாளை இங்கிலாந்து புறப்படுகின்றனர். மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், இந்திய அணி பங்கேற்கிறது. சமீப காலமாக, வெளிநாட்டு மைதானங்களில் பட்டையைக் கிளப்பி வரும் இந்திய அணி, இந்த இரு தொடர்களிலும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடர்களுக்காக 20 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டாலும், இதில் சில வீரர்கள் இடம்பெறாதது குறித்து, இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது முதலே பல கேள்விகள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட காயத்திற்கு பிறகு, ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகமாக பந்து வீசுவதில்லை. இதனால், ஆல் ரவுண்டர் என்ற போர்வையில், இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில், ஹர்திக் பாண்டியாவை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் தேர்வு செய்ய முடியாது என்பதால் தான், அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடபதி ராஜு (Venkatapathy Raju), ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார். 'நியூசிலாந்து அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த அணியின் கைலி ஜேமிசன் (Kyle Jamieson) டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்திய அணிக்கு எதிராகவும் அவரால் விக்கெட்டுகள் வீழ்த்த முடியும். அவரது உயரம் காரணமாக பந்துகளும் அதிகம் பவுன்ஸ் ஆகலாம்.

அது மட்டுமில்லாமல், ஜேமிசன் சிறந்த ஆல் ரவுண்டராகவும் இருப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். நியூசிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களும், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களும் அதிகம் இருக்கிறார்கள். இதில், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வெளிநாட்டு மைதானங்களின் போது அணியில் இல்லாதது, நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவாக இருப்பதை போட்டியின் போது உணர வைக்கும்.

மற்றபடி, இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து யூனிட் உள்ளது. ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரின்  அனுபவம் அதிகம் சாதகமாக இருக்கும். அதே போல, இஷாந்த் ஷர்மா மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளது கூடுதல் பலம். ஒருவேளை பிட்ச் சூழ்நிலை வேறு மாதிரி இருந்தால், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கும் அது கை கொடுக்கும்.


அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உள்ள நிலையில், தன்னை ஒரு சிறந்த ஆல் ரவுண்டராகவும், சமீபத்திய தொடர்களில் ஜடேஜா நிரூபித்துள்ளார்' என வெங்கடபதி ராஜு தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்