இந்திய அணிக்கு ‘புதிய’ கேப்டன்.. வெளியானது இலங்கை தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 13-ம் முதல் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாட இருக்கும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

வரும் 18-ம் தேதி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இப்போட்டி முடிவடைந்ததும், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய விளையாட உள்ளது. இதற்காக கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரஹானே, ஜடேஜா, பும்ரா போன்ற மூத்த வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

அதனால் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இளம்வீரர்களை கொண்ட இந்திய அணியை களமிறக்க உள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி ஷிகார் தவான் தலைமையிலான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), ப்ரித்வி ஷா, தேவதத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்கரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் நெட் பவுலர்களாக இஷான் பரோல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமார்ஜீத் சிங் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

கடந்த இரண்டு முறை இந்திய அணியில் வாய்ப்பை தவறவிட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் இடம்பெற்றுள்ளார். ஆனால் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக ஐபிஎல் தொடரின்போது நடராஜனுக்கு காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் தொடரில் பாதியிலேயே அவர் விலகினார். தற்போது அவர் ஓய்வில் இருப்பதால், இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்