'ஒரே கல்லில்... 3 மாங்காய் அடிக்கும் கோலி'!?.. கார்னர் செய்யப்படுகிறாரா ரோஹித்?.. சர்ச்சையை கிளப்பிய பிசிசிஐ அறிவிப்பு!.. இந்திய அணியில் என்ன நடக்கிறது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் ரோஹித் சர்மா நீக்கப்பட்ட விவகாரம் பெரிதாக வெடிக்கத் துவங்கி உள்ளது. இதில் ரசிகர்கள் ஒவ்வொரு அங்குலமாக ஆராய்ந்து ரோஹித் சர்மாவுக்கு எதிராக விராட் கோலி, பிசிசிஐ நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

'ஒரே கல்லில்... 3 மாங்காய் அடிக்கும் கோலி'!?.. கார்னர் செய்யப்படுகிறாரா ரோஹித்?.. சர்ச்சையை கிளப்பிய பிசிசிஐ அறிவிப்பு!.. இந்திய அணியில் என்ன நடக்கிறது?

தற்போது மூன்று அணிகளிலும் மூன்று கூடுதல் துவக்க வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவும் ரோஹித் சர்மாவுக்கு எதிரான விஷயமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
  
காயத்தில் சிக்கி இருக்கும் அவர் தற்போது பயிற்சி செய்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். ஆனால், அடுத்த இரு மாதங்களில் நடக்க உள்ள ஆஸ்திரேலிய தொடரில் அவர் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. 

இது மட்டுமின்றி அணிக்கு புதிய துணை கேப்டனாக கேஎல் ராகுலை நியமித்துள்ளது பிசிசிஐ. ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. புதிய துணை கேப்டனும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது எல்லாம் தற்காலிகமான விஷயம் தான் என பிசிசிஐ இதுவரை கூறவில்லை. ரோஹித் சர்மாவை பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருவதாக மட்டுமே விளக்கம் கூறி உள்ளது. அவர் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் எந்த காயத்தை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, துணை கேப்டன் அறிவித்தது போன்றே அணியில் மூன்று மாற்று துவக்க வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவேளை ரோஹித் சர்மா அணியில் இடம் பெற்று இருந்தால் இவர்களுக்கு இடம் கிடைத்திருக்காது.

ரோஹித் சர்மா இல்லாத நிலையில் ஒருநாள் மற்றும் டி20 அணியின் துவக்க வீரராக ஷிகர் தவான் அணியில் இடம் பெற்றுள்ளார்.  டெஸ்ட் அணி துவக்க வீரராக மயங்க் அகர்வால் தொடர்ந்து மீண்டும் இடம் பெற்றுள்ளார். ரோஹித் சர்மா இடம் பெற்று இருந்தால் இவர்களுடன் களமிறங்கி இருப்பார்.

அவர் இல்லாத நிலையில் மூன்று அணிகளிலும் புதிய துணை கேப்டன் கேஎல் ராகுல் துவக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஎல் ராகுல் துணை கேப்டன் பதவிக்கு மட்டுமின்றி, துவக்க வீரர் என்ற இடத்திற்கும் ரோஹித் சர்மாவுடன் நேரடியாக போட்டி போட்டு வருகிறார்.

அவரைத் தவிர மூன்று அணிகளிலும் மூன்று கூடுதல் துவக்க வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  டி20 அணியில் மயங்க் அகர்வாலுக்கு இடம் கிடைத்துள்ளது. ஒருநாள் அணியில் ஷுப்மன் கில்லுக்கும், டெஸ்ட் அணியில் ப்ரித்வி ஷாவுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடினால் இவர்கள் துவக்கம் அளிப்பார்கள். 

ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு அணியில் இடம் பெற்றால் இந்த கூடுதல் துவக்க வீரர்கள் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது இதையே காரணம் காட்டி ரோஹித் சர்மாவை காத்திருப்பு பட்டியலில் வைப்பாரா கேப்டன் கோலி? இதில் மற்றொரு விஷயமும் கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்ட பின் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான் அணியில் இணைய முடியும் என்கிறார்கள். இதுவும் அவருக்கு வைக்கப்பட்ட செக் தான். பிசிசிஐ ரோஹித் சர்மா நீக்கம் குறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்