‘போட்டி ஆரம்பிச்சு 16 பால் தான் முடிஞ்சிருக்கு’!.. ‘அதுக்குள்ள இது எப்படி நடந்திருக்கும்?’.. இது என்னடா புது சர்ச்சையா இருக்கு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியின் போது திடீரென பந்து சேதமான சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து ஆகிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்தது.

இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 98 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் கேப்டன் விராட் கோலி 56 ரன்கள் எடுத்தார். மேலும் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 62 ரன்களும், ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்ட்யா 58 ரன்களும் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினர்.

இதனை அடுத்து 318 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தனர். 135 ரன்கள் அடித்து நங்கூரம் போல நின்ற இந்த கூட்டணியை, அறிமுக பந்துவீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பிரித்தார். 46 ரன்கள் அடித்திருந்தபோது சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஜேசன் ராய் அவுட்டானார்.

இதனைத் தொடர்ந்து 94 ரன்கள் அடித்திருந்தபோது ஷர்துல் தாகூரின் ஓவரில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஜானி பேர்ஸ்டோவும் அவுட்டானார். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணி எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இரண்டு ஓவர்கள் வரை இந்தியா 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது 3-வது ஓவரை இங்கிலாந்து அணியின் மார்க் வுட் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை ஷிகர் தவான் பவுண்டரிக்கு விளாசினார். இதனை அடுத்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் பந்து வீசப்பட்டது. உடனே அம்பயர்கள் அந்த பந்தை வாங்கி சோதனை செய்தார்.

அப்போது பந்து பல இடங்களில் சேதமடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பந்தில் ஒரு துளை இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக புதிய பந்து மாற்றப்பட்டது. போட்டி ஆரம்பித்து 16 பந்துகளே வீசியுள்ள நிலையில் பந்து சேதமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்