'அவருக்கெல்லாம் 10 கோடியா'... 'அப்படி வாங்குறவங்க 'தலை'ல கல் தான் இருக்கு போல'... 'அதிரடி' வீரர் குறித்து 'ஸ்டைரிஸ்' பரபரப்பு 'கருத்து'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவில் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னர் ஐபிஎல் ஏலத்தை வரும் பிப்ரவரி மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இதற்காக அனைத்து அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்றும், எந்த வீரர்களை வெளியேற்றப் போகிறது என்பது குறித்துமான பட்டியலை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அதிரடி வீரர் மேக்ஸ்வெல் உட்பட சில வீரர்களை வெளியேற்றியது.

கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த  ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 போட்டிகளில் அவர் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். பஞ்சாப் அணி சுமார் 10 கோடிக்கு மேல் கொடுத்து அவரை வாங்கியிருந்த நிலையில், சுமாரான ஆட்டத்தையே மேக்ஸ்வெல் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால், ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடியிருந்தார். இதனால் அவர் மீது அதிக விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. தற்போது பஞ்சாப் அணி மூலம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதால் எந்த அணி இவரை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

இதனிடையே, நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல் இருப்பது குறித்து பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'கடந்த சில ஐபிஎல் சீசன்களில் மேக்ஸ்வெல் ஆட்டம் மோசமாக உள்ளது. நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை எந்த அணியாவது அவரை எடுக்க நினைத்தால், அவருக்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையிலேயே எடுக்க வேண்டும்.

அதை விட்டு, கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை கொண்டு போய் அவரை வாங்க நினைத்தால், அவர்களின் தலையில் கல் தான் உள்ளது என அர்த்தம். மேக்ஸ்வெல் சிறந்த வீரர் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால், கடைசி சில சீசன்கள் மோசமாக ஆடியுள்ளார். இதனால் அவரை நிர்ணயிக்கப்பட்ட தொகையிலேயே ஒரு அணி எடுத்து அவர் சிறப்பாக ஆடினால், நிச்சயம் அந்த அணிக்கு பெரிய பலன் கிடைக்கும்' என ஸ்காட் ஸ்டைரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்