"ஒரு வேளை 'சிஎஸ்கே'வ விட்டு தோனி கெளம்பிட்டாருன்னா, அவங்க உடனடியா பண்ண வேண்டிய 'விஷயம்' இது தான்.." முன்னாள் வீரர் கொடுத்த 'ஐடியா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த சீசனில், மிகவும் மோசமான விமர்சனத்தை சந்தித்திருந்த சென்னை அணி, இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பட்டையை கிளப்பி, எதிரணியினரை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, அதில், 5 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாகவும் சிஎஸ்கே கருதப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிஎஸ்கே கேப்டன் தோனி (Dhoni), கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் சென்னை அணி சொதப்பியதால், கடந்த சீசனுடன் தோனி, ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால், கடைசி லீக் போட்டியில், தான் ஓய்வு பெறப் போவதில்லை எனக்கூறி, தன்னை குறித்துள்ள வதந்திகளுக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இந்த சீசனில், அற்புதமாக கேப்டன்சி செய்து வரும் தோனி, அடுத்த சீசனில் ஆடுவாரா என்ற கேள்வி தற்போதே எழுந்து வருகிறது. அப்படி ஒரு வேளை, தோனி ஓய்வு பெற்றால், அடுத்த கேப்டனாக யார் செயல்படுவார் என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. ஜடேஜா, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் பெயர்களை பலர் தெரிவித்து வரும் நிலையில், சிஎஸ்கேவின் கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது பற்றி, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா (Pragyan Ojha) கருத்து தெரிவித்துள்ளார்.

'சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில், ஜடேஜா வேண்டுமானால், துணை கேப்டனாக செயல்படலாம். ஆனால், கேப்டன்சியை பற்றி பேசும் போது, அதனை தோனி போல சிறப்பாக செய்யக் கூடிய ஒரே ஒரு வீரர் மட்டும் தான் இருக்கிறார். அது கேன் வில்லியம்சன் (Kane Williamson) மட்டும் தான். அவரை ஹைதராபாத் அணி அதிகம் பயன்படுத்துவதில்லை.

அடுத்த ஆண்டு, ஐபிஎல் தொடருக்கு முன்பாக, மெகா ஏலம் நடைபெறவுள்ளது. ஒருவேளை தோனி அடுத்த சீசனில் தொடர்ந்து ஆடினால், கேப்டன்சி பற்றிய கேள்வியே எழப் போவதில்லை. ஆனால், தோனி ஆடாமல் போனால், அதற்கு பதிலாக, சிஎஸ்கே அணி, வில்லியம்சனை அணிக்குள் கொண்டு வந்து, அவரை கேப்டனாக்க வேண்டும்' என சிஎஸ்கே அணிக்கு பிரக்யான் ஓஜா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்