'இதுவும் போச்சா'?.. 'டி20 உலகக் கோப்பை நடத்தலாமா? வேண்டாமா'?.. ஐசிசி அவசர மீட்டிங்!.. கடும் விரக்தியில் பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்தலாமா அல்லது கைவிடலாமா என்பது குறித்த முக்கிய முடிவினை ஜூன் 1ம் தேதி ஐசிசி எடுக்கவுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட, பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இதற்கிடையே நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரில், கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. பிறகு அடுத்தடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், இதர கொல்கத்தா வீரர்கள் என்று அடுத்தடுத்து வைரஸ் பரவ, மறு தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்திவைத்தது பிசிசிஐ.  

மீண்டும் ஐபிஎல் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதே வேலையில், உலகக் கோப்பை டி20 தொடர் நிலை அந்தரத்தில் தொங்குகிறது. உலகக் கோப்பை டி20 தொடர், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கவிருக்கிறது.



கடந்த 2020ம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய தொடர் இது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2021ல் இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறும் என்று ஐசிசி ஒத்திவைத்தது. ஆனால், இந்தியாவில் இப்போது நிலவும் மோசமான சூழலில், அதை நடத்த வாய்ப்பே இல்லை. 

இந்த நிலையில், உலகக் கோப்பை குறித்து ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தற்போதைய சூழலில், இங்கு உலகக் கோப்பையை நடத்த முடியுமா என்று ஆலோசிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் நடத்த முடியாவிட்டால், வேறு எந்த நாட்டிலாவது நடத்த வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. 

மேலும், மற்ற அணிகளுக்கு வெவ்வேறு கிரிக்கெட் தொடர்கள் அடுத்தடுத்து இருப்பதால், அதற்கான அட்டவணை ஏற்கனவே போடப்பட்டுவிட்டதால், உலகக் கோப்பையை வேறு தேதிக்கு மாற்ற முடியாத சூழல் உள்ளது. எனவே, இத்தொடரை நடத்தலாமா அல்லது கைவிடலாமா என்பது குறித்த இறுதி முடிவை ஐசிசி அன்றைய தினம் எடுக்க உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஆசிய கோப்பைத் தொடர் ரத்து செய்யப்பட்டுவிட்ட சூழலில், டி20 உலகக் கோப்பை நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது. 

இந்த நிலையில், வரும் மே 29ம் தேதி, SGM எனப்படும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை பிசிசிஐ கூட்டுகிறது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. அன்றைய தினம் பிசிசிஐ எடுக்கும் முடிவுகள், ஜூன் 1ம் தேதி மீட்டிங்கில் ஐசிசி-யிடம் தெரிவிக்கப்படும். அதனைப் பொறுத்தே இறுதி முடிவுகள் தெரியவரும்.

இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு தொடருக்காக பிசிசிஐ அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, புது டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, தரம்சாலா மற்றும் லக்னோ ஆகிய 9 இடங்களை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்