'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'!.. இந்திய அணியை கெத்தாக மாற்றிய 'அந்த' ஒரு போட்டித் தொடர்!.. ஐசிசி கொடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியை உலக அரங்கில் அசைக்க முடியாத ஒரு அணியாக மாற்றிய தொடரை மீண்டும் அறிமுகம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ஐசிசி.

செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, ஐபிஎல் தொடரை பிசிசிஐ தொடங்குகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, கடந்த மே 29 அன்று மும்பையில் நடந்த SGM மீட்டிங்கிற்கு பிறகு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (SGM) இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்த நிலையில், நேற்று (மே 1) நடந்த ஐசிசி ஆலோசனை கூட்டத்தில், 2023 முதல் 2031 வரையிலான எட்டு வருடங்களுக்கான கிரிக்கெட் தொடர்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பிசிசிஐ சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கொரோனாவுக்கு மத்தியில் இந்தியாவில் நடத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க, பிசிசிஐ விடுத்த கால அவகாச கோரிக்கையை ஐசிசி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதன்படி 20 ஓவர் உலக கோப்பை குறித்து முடிவெடுக்க, வரும் 28ம் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் பிசிசிஐ தெரிவிக்கும் திட்டத்தின்படி 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஐசிசி தனது இறுதி முடிவை எடுத்து அறிவிக்கும். 

மேலும், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது என்றும், 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை 16-ல் இருந்து 20 ஆக உயர்த்துவது என்றும், இதே போல் 2027-ம் ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 14 ஆக உயர்த்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

2024-ம் ஆண்டில் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்குள் டாப்-8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை 2 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றை 4 முறையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 2017ம் ஆண்டோடு நிறுத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராஃப்பி தொடரை மீண்டும் அறிமுகம் செய்திருக்கிறது ஐசிசி. எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராஃப்பி தொடர் 2025 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்