‘ஆமா... அவங்க என்னை ஏலத்துல எடுக்காதது ரொம்ப ஏமாற்றமாக இருந்துச்சு’!.. பழசை நினைச்சு வேதனைப் பட்ட புஜாரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இடம் கிடைக்காமல் இருந்தது வேதனையாக இருந்ததாக புஜரா தெரிவித்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு எடுத்தது. அப்போது அங்கிருந்த மற்ற அணி நிர்வாகிகள் அனைவரும் கைதட்டி இதனை வரவேற்றனர்.

ஐபிஎல் தொடரில் கடந்த 7 ஆண்டுகளாக புஜாராவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடைசியாக 2014-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பாக புஜாரா விளையாடி இருந்தார். இதன்பின்னர் எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக புஜாராவின் சொந்த ஊரான ராஜ்கோட்டை தலைமையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குஜராத் லயன்ஸ் அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த நிலையில் Cricbuzz சேனலுக்கு புஜாரா பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் லயன்ஸ் அணி எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த புஜாரா, ‘ஆமாம், அவர்கள் என்னை எடுக்காதது ஏமாற்றமாக இருந்தது. ஆனால் எதுவுமே என் கையில் இல்லை. அப்போது அந்த அணியில் நான் இடம்பிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது பழைய விஷயம், அதை நான் கடந்துவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஐபிஎல் தொடரில் கடைசியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினேன். அது 2014-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் என்று நினைக்கிறேன். தற்போது ஐபிஎல் தொடருக்கு திரும்பவும் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. உலகத்தின் சிறந்த கிரிக்கெட் தொடரில் சில காலம் என்னால் விளையாட முடியாமல் இருந்ததை நினைத்தால் வருத்தமாக உள்ளது’ என புஜாரா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கிய, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2016-2017 ஆகிய இரு ஆண்டுகளுக்காக மட்டும் ரைஸிங் புனே சூப்பர்ஜெயிண்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் என்ற இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. இதில் சுரேஷ் ரெய்னா தலைமையில் குஜராத் லயன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்