‘நான் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் கமெண்ட்ரி பண்ணுவேன்’!.. அப்போ ‘ஐபிஎல்’ கிரிக்கெட் இல்லையா..? முன்னாள் வீரரின் மோசமான பதில்.. கொதித்த ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் மோசமாக விமர்சனம் செய்தது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங் (Michael Holding), தனது அபார பந்துவீச்சின் மூலம் பல முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். தற்போது இவர், பல்வேறு கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட அவர் வர்ணனை செய்ததில்லை.

இந்த நிலையில் The Indian Express ஊடகத்துக்கு பேட்டியளித்த மைக்கேல் ஹோல்டிங், ‘டி20 போட்டிகள் உலக கிரிக்கெட்டில் ஒரு கறை போன்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு தேசத்திற்காக விளையாடுவதை விட பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு டி20 தொடர்கள் தான் முக்கியமாக உள்ளது. அதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் ஒரு ஏழை நாடு. அங்கு இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியாவில் கொடுப்பதுபோல் அதிக அளவிலான ஊதியம் வழங்கப்படமாட்டாது. ஆனால் சில வாரங்களில் 8,00,000 டாலர்கள் வரை கிடைப்பதால் டி20 லீக் தொடருக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்’ என காட்டமாக பேசியுள்ளார்.

அப்போது, ஐபிஎல் தொடரில் மட்டும் ஏன் வர்ணனை செய்வதில்லை? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘நான் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும்தான் வர்ணனை செய்வேன்’ என பதிலளித்தார். அதாவது ஐபிஎல் போட்டிகளை அவர் ஒரு கிரிக்கெட்டாக மதிக்கவில்லை என மறைமுகமாக சாடியுள்ளார்.

உலகளவில் உள்ள வீரர்கள் பலர் தங்களது திறமையை நிரூபித்துக்கொள்ளவும், ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ளவும் ஐபிஎல் தொடர் உதவி வருகிறது. ஐபிஎல்-ல் சிறப்பாக ஆடிய பல இளம் வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வாகி விளையாடி வருகின்றனர். அப்படி இருக்கையில், ஐபிஎல் போட்டிகளை மோசமாக சாடிய மைக்கேல் ஹோல்டிங்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்