‘உங்களை இப்படி பார்க்க முடியல’!.. நொறுங்கிப் போன ரசிகர்கள்.. வார்னருக்காக ‘குரல்’ கொடுத்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ப்ளேயிங் லெவனில் வார்னர் இடம்பெறாததற்கு பிரெட் லீ அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி இருந்து வருகிறது. தொடர் தோல்விக்கு ஹைதராபாத் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர்தான் காரணம் என பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.04.2021) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுதோல்வியை சந்தித்தது. போட்டி முடிந்தபின் பேசிய ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், இந்த தோல்விக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம் என்றும், தான் மெதுவாக பேட்டிங் செய்து ரன் சேர்க்க தவறியதே காரணம் என்றும் வார்னர் கூறினார்.

இதனை அடுத்து திடீரென வார்னர் கேப்டன் பதவியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்தது. இவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். புதிய மாற்றத்துடன் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஹைதராபாத் மோதியது.

அப்போட்டியின் டாஸ் போட்டு முடிந்ததும் ஹைதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், டேவிட் வார்னர் ப்ளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார். ஆனாலும் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளதால், நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு வெற்றி கிடைக்கும் என ஹைதராபாத் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் அப்போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 220 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஜாஸ் பட்லர் 124 ரன்கள் அடித்து மிரள வைத்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி, 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 31 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

இந்த தோல்வி ஒருபக்கம் ஹைதராபாத் ரசிர்களை வாட்டி நிலையில், டேவிட் வார்னர் கையில் கூல்ரிங்ஸ் பாட்டில்களை சுமந்து வருவது, பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு மைதானத்தில் பேட்டுகளை மாற்றக் கொண்டு போவதுமாக இருந்தார். இது ஹைதராபாத் ரசிகர்களை மேலும் வருத்தமடைய செய்தது. இதனால் வார்னரின் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இவரை இப்படி பார்க்க கஷ்டமாக உள்ளது என ரசிகர்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ, வார்னருக்கு ஆதராவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து Star Sports சேனலில் பேசிய அவர், ‘ப்ளேயிங் லெவனில் வார்னர் பெயர் இல்லாததைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன். எனக்கு தெரியும் இது அவர் விளையாடும் கிரிக்கெட் ஃபார்ம் கிடையாது. ஆனாலும் அவர் எப்போதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான வீரர்’ என பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரெட் லீ, ‘ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் ரன்கள் அடித்துள்ளார். என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், உண்மையில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அவர் எப்போதும் ஒரு டீம் ப்ளேயர். அவருக்கு அணியில் நல்ல இடம் கிடைக்கும் என நம்புகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்