WTC final-ன் கடைசி நாள்.. ‘பயத்துல பாத்ரூமில் போய் ஒளிஞ்சிக்கிட்டேன்’.. நியூஸிலாந்து வீரர் சொன்ன ‘சுவாரஸ்ய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது பயத்தில் நியூஸிலாந்து வீரர் ஒருவர் பாத்ரூமில் ஒளிந்துகொண்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த வாரம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் தொடர்களில் முதல்முறையாக நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது குறித்து நியூஸிலாந்து வீரர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன், கடைசி நாள் ஆட்டம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், ‘போட்டியின் கடைசி நாளன்று ஓய்வு அறைக்குள் அமர்ந்து டிவியில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தோம். நேரில் பார்ப்பதை விட டிவியில் சற்று தாமதமாகதான் இருந்தது. அப்போது இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு பந்திற்கும் ஆரவாரம் செய்து உற்சாக மூட்ட, விக்கெட் ஏதும் விழுந்து விடுமோ ? என்ற பயம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் நல்ல வேளையாக அது விக்கெட் இல்லாமல் ஒரு ரன்னாகவோ அல்லது ரன் ஏதுமின்றியும் அமைந்திருந்தது.

ரசிகர்களின் ஆரவாரம் காரணமாக எனக்கு ஏற்பட்ட பயத்தால் நான் சற்று பதற்றமானேன். அதுமட்டுமின்றி டிவியில் போட்டி சற்று தாமதமாக ஒளிபரப்பானதால் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதனால் போட்டியைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று பாத்ரூமில் போய் ஒளிந்து கொண்டேன்.

ஆனாலும் எங்கள் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் சீனியர் வீரர் ராஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுத் தந்தனர். அதன்பிறகுதான் நான் மகிழ்ச்சி அடைந்தேன்’ என கெயில் ஜேமிசன் கூறியுள்ளார். இந்த இறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய கெயில் ஜேமிசனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்