‘டி20 உலகக்கோப்பை’!.. ஒரு பக்கம் ரோஹித், மறுபக்கம் ராகுல்.. காத்திருக்கும் மிகப்பெரிய சவால்..! என்ன செய்யப் போகிறார் தவான்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினாலும் ஷிகர் தவானுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற இருந்த இந்த தொடர், கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன.

அந்த வகையில் இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களை டி20 உலகக்கோப்பைக்கு பிசிசிஐ தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான 6 போட்டிகளிலும் தவான் சிறப்பாக செயல்பட்டாலும், டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘டி20 உலகக்கோப்பை தொடரில் தொடக்க வீரருக்கான இடத்தை பிடிப்பது மிகவும் கடினமான போட்டியாக இருக்கப்போகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மா விளையாடுவது என்பது உறுதியான ஒன்று. மற்றொரு இடத்திற்கு தவானை விட கே.எல்.ராகுல்தான் முதன்மை தேர்வாக உள்ளார். டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் 140 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் தவான் 127 மட்டுமே வைத்துள்ளார்.

ஷிகர் தவான் இலங்கை தொடரில் முடிந்த அளவிற்கு அதிக ரன்களை அடிக்க வேண்டும். அது ராகுல் மற்றும் ரோஹித்திற்கு அழுத்தத்தை கொடுக்கும். அப்படியொரு அழுத்தம் ஏற்பட்டு அவர்களில் யாரேனும் சொதப்பினால் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு வீரராக அவரால் அதனை மட்டுமே செய்ய முடியும். இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரும் டி20 உலகக்கோப்பையில் இடம்பெற முக்கிய தொடராக இருக்கும் என்பதால், அதிலும் தவானின் பங்களிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது’ என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடந்து பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில், அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஷிகர் தவான் (380 ரன்கள்)  முதல் இடத்திலும், கே.எல்.ராகுல் (331 ரன்கள்) இரண்டாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்