‘கொஞ்ச நாளா சரியா விளையாடல, பவுலிங்கும் செய்யல’!.. அடுக்கடுக்காக விழுந்த விமர்சனம்.. பாண்ட்யா சொன்ன ‘நச்’ பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடருக்காக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்று வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு ஹர்திக் பாண்ட்யா அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் சில கிரிக்கெட் தொடர்களில் அவர் விளையாடவில்லை.

இதனை அடுத்து காயத்தில் இருந்து மீண்டு, கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரில் சற்று தடுமாறினார். மேலும் அந்த தொடர்களில் அவர் பவுலிங்கும் அதிகமாக செய்யவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதன்காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை. பவுலிங் செய்தால் மட்டுமே டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என தேர்வுக்குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் தனது இருப்பை உறுதி செய்ய ஹர்திக் பாண்ட்யா ஒரு முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா, ‘டி20 உலகக்கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் நான் பந்து வீசுவேன். அதற்கு முன்பு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை உறுதி செய்துகொண்டு, டி20 உலகக்கோப்பை தொடர் மீது கவனத்தை செலுத்த உள்ளேன். என்னால் பந்துவீச முடியும் என்பது எனக்கு தெரியும், அதனால் அதை நான் மிஸ் பண்ண மாட்டேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எனது பந்துவீச்சின் வேகத்தை குறைக்கவில்லை. 100 சதவீத உடல் தகுதி இருக்கும் போது மட்டுமே நான் விளையாட விரும்புகிறேன். 50 சதவீத உடல் தகுதியுடன் விளையாட  நான் விரும்பவில்லை’ என அவர் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஹர்திக் பாண்ட்யாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்