‘அப்பா இது உங்களுக்காக..!’.. பேச முடியாமல் கண் கலங்கிய க்ருணல் பாண்ட்யா.. சகோதருக்காக ‘ஹர்திக்’ பதிவிட்ட உருக்கமான பதிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்து க்ருணல் பாண்ட்யா குறித்து அவரது சகோதரர் ஹர்திக் பாண்டயா ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று புனேயில் நடைபெற்றது. இதில் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இதில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து இந்திய அணி தடுமாறி வந்தது. இந்த சமயத்தில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுடன் க்ருணல் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறிடிக்க தொடங்கினர்.

அதில் சாம் கர்ரனின் ஒரு ஓவரில் 3 பவுண்டரி பறக்க விட்ட க்ருணல் பாண்ட்யா, மற்ற பந்துவீச்சாளர்களான மார்க் வுட், டாம் கர்ரனின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் இந்தியா குவித்தது. இதில் கே.எல்.ராகுல் 62 ரன்களும், (4 பவுண்டரி, 4 சிக்சர்), க்ருணல் பாண்ட்யா 58 ரன்களும் (31 பந்துகளில், 7 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதில் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை க்ருணல் பாண்ட்யா படைத்தார். முன்னதாக 1990-ம் ஆண்டு நியூசிலாந்து அறிமுக வீரர் ஜான் மோரிஸ் 35 பந்துகளில் அரைசதம் எடுத்ததே சாதனையாக இருந்தது. இவரின் 31 ஆண்டு கால சாதனையை க்ருணல் பாண்ட்யா தற்போது முறியடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 42.1 ஓவர்களில் 251 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் க்ருணல் பாண்ட்யா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

போட்டி முடிந்தபின் பேட்டியளித்த க்ருணல் பாண்ட்யா, மறைந்த தனது தந்தையை நினைத்து உணர்ச்சியில் பேசமுடியாமல் கண் கலங்கினார். மறைந்த தந்தைக்கு அரைசதத்தை அர்ப்பணிப்பதாக கூறியபடி அவர் கண்ணீர் சிந்தினார். அப்போது அவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யாவை கட்டித் தழுவி ஆறுதல் கூறினார். பாண்ட்யா சகோதரர்களின் தந்தை கடந்த ஜனவரி மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சகோதரர் குறித்து பதிவிட்ட ஹர்திக் பாண்ட்யா, ‘அப்பா நிச்சயம் பெருமைப்படுவார். அவர் உன்னைப் பார்த்து புன்னைக்கிறார், உனக்கான பிறந்தநாள் பரிசையும் அனுப்பியுள்ளார். இந்த உலகத்தில் இன்னும் பலவற்றிற்கும் நீ தகுதியானவன். இது உங்களுக்காக அப்பா’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்