ஓய்வு முடிவை அறிவித்த ஹர்பஜன் சிங்.. இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான், ஆனா.. உருகிய ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், தனது அசாத்திய சுழற்பந்து வீச்சால், மிகப் பெரிய பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்தவர் ஹர்பஜன் சிங். அது மட்டுமில்லாமல், டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையும் அவருடையது தான். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 417 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஹர்பஜன் சிங், டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் உடைய நான்காவது இந்திய பந்து வீச்சாளர் ஆவார்.

தனது ஓய்வு பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ஹர்பஜன் சிங், 'அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு நாள் நிச்சயம் முடிவுக்கு வரும். எனது வாழ்க்கையில், அனைத்தையும் கொடுத்த கிரிக்கெட்டில் இருந்து இன்று நான் விடைபெறுகிறேன். இந்த 23 ஆண்டு கால பயணத்தை, அழகாகவும், மறக்க முடியாத தருணங்களாகவும் மாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் அறிமுகம்

கடந்த 1998 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமாகி இருந்தார் ஹர்பஜன் சிங். இந்திய அணி 2007 ஆம் ஆண்டு வென்ற டி 20 உலக கோப்பையில் இடம்பெற்றிருந்த அவர், மொத்தம் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். அதே போல, 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வென்ற ஐம்பது ஓவர் கோப்பையின் இந்திய அணியிலும் ஹர்பஜன் சிங் இடம் பிடித்திருந்தார். இந்திய அணிக்காக, 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒரு நாள் போட்டி மற்றும் 28 டி 20 போட்டிகளை ஆடியுள்ள ஹர்பஜன் சிங், அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்திருந்தார்.

கடைசி போட்டி

இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு தனது கடைசி சர்வதேச போட்டியை (டி 20 போட்டி - இலங்கை அணிக்கு எதிராக) ஆடியிருந்தார். அதன் பிறகு, சர்வதேச போட்டிகளில் ஆடாமல் இருந்த போதும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார். கடைசியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியிருந்த ஹர்பஜன் சிங், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய போது, தமிழிலேயே ட்வீட் செய்து, சிஎஸ்கே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடினமான நேரம்

'ஜலந்தர் தெருக்களில் இருந்து இந்திய அணிக்கு உண்டான எனது பயணம் மிக அழகானது. இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு, மைதானத்திற்குள் நுழைவதை விட, மிகப் பெரிய ஊக்கம் எதுவும் இருந்து விடாது. இருப்பினும், வாழ்க்கையில் ஒரு நேரம் வரும் போது, கடினமான முடிவுகளை நாம் எடுத்து தான் ஆக வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்த முடிவினை பொதுவாக வெளியிட காத்திருந்தேன். நான் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்.

பல வழிகளில் நான் ஏற்கனவே ஒரு கிரிக்கெட் வீரராக ரிட்டையர்டு ஆகி விட்டேன். ஆனால், முறையான ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் இருந்தேன். நான் கொஞ்ச காலமாக, ஆக்டிவான கிரிக்கெட் வீரராக இருக்கவில்லை. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை செலவிட முடிவு செய்திருந்தேன். ஆனால், அந்த சீசனின் போதே, ஓய்வு பெற வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன்' என ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் அறிவித்துள்ளார்.

 

நன்றி சொல்லும் ரசிகர்கள்

அணில் கும்ப்ளேவிற்கு பிறகு, இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஓய்வு முடிவை அறிவித்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்ததற்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

CRICKET, HARBHAJAN SINGH, ஹர்பஜன் சிங்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்