"யுவராஜ்-க்கு கேன்சர்-னு தெரியவந்தப்போ".. உலகக்கோப்பை தொடரில் நடந்த சம்பவம்.. மனம் திறந்த ஹர்பஜன் சிங்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இந்திய ரசிகர்களுக்கு உலகக்கோப்பை கனவு கண்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த நேரம். தோனி தலைமையிலான இந்திய அணி மீது அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடையே இருந்தது. லீக் போட்டிகளில் துவம்சம் செய்துகொண்டிருந்த இந்தியா அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியபோதே தோனி படை சரித்திரம் படைக்க தயாராகிவிட்டது பலருக்கும் புரிந்துவிட்டது.

வான்கடே. உலகக்கோப்பை இறுதிப்போட்டி. இந்தியாவின் மொத்த பார்வையும் மைதானத்தின் மீது தான் இருந்தது. 28 வருட கனவு. இன்று கைகூடுமா? என ஏக்கத்தில் இருந்தது ரசிகர்கள் பட்டாளம். சேசிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, தோனி வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே களத்திற்கு வந்தார். படைப்பதற்கு ஒரு சாதனை மிச்சம் இருக்கிறது என அவருக்கு தோன்றியிருக்கலாம். எகிறும் பிரெஷர், மிகப்பெரிய இலக்கு என நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதானத்துடன் துவங்கிய தோனி - கம்பீருடன் இணைந்து கண்முன்னே அதிசயத்தை நிகழ்த்திக்காட்டினார்கள். 28 வருட கனவை கோப்பையாக அவர் ஏந்திய தருணம் கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத நிகழ்வு தான்.

இப்படி இந்தியா உலகக்கோப்பையை வென்ற கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனுடனேயே அவர் உலகக்கோப்பையில் விளையாடியதும் தெரிந்து ரசிகர்கள் உடைந்துபோனார்கள். அந்த தருணம் பற்றித்தான் பேசியிருக்கிறார் ஹர்பஜன் சிங்.

இதுகுறித்து பேசிய அவர்,"யுவராஜ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், போட்டிகளுக்கு முன்பு சில சமயம் அவர் கவலையுடன் தென்பட்டார். பேட்டிங் செய்யும் போது கூட அவர் இருமல், சில சமயங்களில் வாந்தி எடுப்பார். நான் அவரிடம் 'ஏன் இவ்வளவு இருமல்? உங்கள் வயதைப் பாருங்கள், என்ன ஆயிற்று?' என்பேன். ஆனால் அவருடைய உடல்நிலை குறித்து எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. நோயுடனேயே அவர் உலகக்கோப்பையில் விளையாடினார்.

பின்னர் அவை புற்றுநோயின் அறிகுறிகள் என்பதை அவர் கண்டுபிடித்தார். சில சமயங்களில் அவருடைய நிலைமையை அறியாமல் நாங்கள் கிண்டல் செய்திருக்கிறோம். அவர் உண்மையிலேயே சேம்பியன். யுவராஜ் சிங் இல்லாவிட்டால் 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்காது என்று நினைக்கிறேன். யுவராஜ் சிங் மாதிரி ஒரு வீரரை காண்பது அரிது" எனத் தெரிவித்திருக்கிறார்.

YUVARAJ SINGH, HARBHAJAN SINGH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்