ஓய்வுக்கு பின்னால இருக்குற காரணம்?.. தோனி மேலயே குத்தம் சொன்ன ஹர்பஜன் சிங்.. பரபரப்பான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா : தோனியைப் போல தனக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், இன்னும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய அணியில் அணில் கும்ப்ளேவிற்கு பிறகு, சிறந்த ஒரு சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் கிடைத்தார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும், தனது சுழற்பந்து வீச்சு மூலம் மாயாஜாலம் காட்டிய ஹர்பஜன் சிங், 400 விக்கெட்டுகளுக்கும் மேல், டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி, பல சாதனைகளை புரிந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த வாரம், ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங், கடந்த 2015 ஆம் ஆண்டு, தனது கடைசி சர்வதேச போட்டியில் ஆடியிருந்தார்.

சர்வதேச வாய்ப்பு

அதன் பிறகு, அவருக்கு எந்த விதமான தொடரிலும், சர்வதேச அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதில், கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், 2021 ஆம் ஆண்டு ஐபில் தொடரில் இடம்பெற்றிருந்தார் ஹர்பஜன் சிங்.

இன்னும் சாதனை செய்திருப்பேன்

ஓய்வுக்கு பிறகு, தனக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், 400 விக்கெட்டுகள் எடுத்த பிறகும், இந்திய அணி தன்னை புறக்கணித்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இதுபற்றி தற்போது விளக்கமாக பேசியுள்ளார் ஹர்பஜன் சிங்.


இது தொடர்பாக, ஜீ நியூஸிற்கு அளித்த பேட்டியில், 'அதிர்ஷ்டம் எப்போதும் என் பக்கம் தான் இருந்தது. ஆனால், சில வெளிப்புற சக்திகள், எப்போதும் எனக்கு எதிராகவே செயல்பட்டது. எனது பந்து வீச்சின் மூலம், நான் அடைந்த உயரம் இதற்கு காரணமாக இருக்கலாம். என்னுடைய 31 வயதில், நான் 400 விக்கெட்டுகளை எடுத்தேன். இன்னும் 4 - 5 ஆண்டுகள் நான் ஆடியிருந்தால், இன்னும் 100 - 150 விக்கெட்டுகள் வரை எடுத்திருக்க வேண்டும் என்ற இலக்கை வைத்திருப்பேன்.

காரணம் யார்?

'அந்த நேரத்தில் தோனி தான கேப்டனாக இருந்தார். ஆனால், அவரைத் தாண்டி, அவருக்கும் மேலே ஒன்று இருந்தது. இன்னும் தெளிவாக சொல்லப் போனால், பிசிசிஐயிலுள்ள சில அதிகாரிகள், இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தான் என்னை ஆட வைக்கக் கூடாது என நினைத்திருப்பார்கள். ஒருவேளை கேப்டன் தோனி கூட இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். இருப்பினும், கேப்டன் என்பதை விட பிசிசிஐ பெரியது. இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என இவை அனைத்தையும் விட, பிசிசிஐ நிர்வாகிகள் மிகப் பெரியவர்கள்.

தோனிக்கு மட்டுமே ஆதரவு

நான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது பற்றி, பலரிடம் கேள்வி எழுப்பினேன். தோனியிடம் கூட, இதனை பற்றிக் கேட்டேன். ஆனால், அவரும் பதில் சொல்லவில்லை. மேலும், அப்போது, அணியில் இருந்த மற்ற வீரர்களை விட, தோனிக்கு தான் அதிக ஆதரவு இருந்தது. ஒரு வேளை, அவருக்கு கிடைத்த ஆதரவு, என்னைப் போல மற்ற வீரர்களுக்கும் கிடைத்திருந்தால், நாங்களும் சிறப்பாக தான் விளையாடி இருப்போம்.

அதிர்ஷ்டம் இல்லாமல் போகும்

தோனிக்கு மட்டுமே ஆதரவு கொடுத்த சமயத்தில், பேட்டை எடுத்து ஆடவோ, பந்தை எப்படி வீசுவது என்பதை தெரியாதவர்கள் ஆகவோ, திடீரென நாங்கள் மாறவில்லை' என கடுமையான விமர்சனத்தை ஹர்பஜன் சிங் முன் வைத்துள்ளார். மேலும், இந்திய அணிக்காக கடைசியாக ஆடாமல் போனது பற்றி வருந்திய ஹர்பஜன் சிங், 'இந்திய ஜெர்சியில் தான் அனைவரும் விடை பெற விரும்புவார்கள். ஆனால், சில நேரம் நமக்கு அதிர்ஷ்டம் கை கூடாமல் போகும் நேரத்தில் இப்படி தான் நடக்கும். விவிஎஸ் லக்ஷ்மன், வீரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூட, வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், வேறு வழியின்றி ஓய்வை அறிவித்தார்கள்' என தெரிவித்தார்.

நிறைய வில்லன்கள்

தன்னால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் ஆட முடியாமல் போனதற்கு, பிசிசிஐ மற்றும் தோனியை கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங், 'எனது வாழ்க்கையை, சினிமா அல்லது வெப் சீரியஸாக எடுக்க விரும்புகிறேன். அதில் வில்லன் யார் என்று கூற முடியாது. ஆனால், நிறைய பேர் உள்ளனர்' என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

HARBHAJAN SINGH, MS DHONI, BCCI, ஹர்பஜன் சிங், பிசிசிஐ, எம் எஸ் தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்