"அவரு பேசுன பேச்சுக்கு தான் கேப்டன் 'பதவி'ய பறிச்சுட்டாங்க.." 'வார்னர்' பற்றி 'முன்னாள்' வீரர் சொன்ன 'விஷயம்'... பரபரப்பை ஏற்படுத்திய 'கருத்து'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன், இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள், பயோ பபுள் விதிகளை கடைபிடித்த போதும், கொல்கத்தா அணி வீரர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று முதலில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.


முன்னதாக, இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்றது வரையிலான போட்டிகளின் அடிப்படையில், ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மொத்தமாக, 7 போட்டிகளை ஆடியுள்ள ஹைதராபாத் அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதில், ஹைதராபாத் அணி பங்கேற்ற கடைசி போட்டிக்கு முன்பாக, டேவிட் வார்னரை (David Warner) கேப்டன் பதவியில் இருந்து ஹைதராபாத் அணி நிர்வாகம் நீக்கியிருந்தது.

தொடர்ந்து, வில்லியம்சனை புதிய கேப்டனாகவும் அந்த அணி நிர்வாகம் நியமித்திருந்தது. அதே போல, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், வார்னரை களமிறக்கவில்லை. இந்த போட்டியிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்திருந்தது.


கடந்த பல ஐபிஎல் தொடர்களில், ஹைதராபாத் அணி தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவும், ஒரு முறை ஐபிஎல் கோப்பையை ஹைதராபாத் அணி வெல்லவும் காரணமாக இருந்தவர் வார்னர். அப்படிப்பட்ட கேப்டனை, ஒரே ஒரு தொடரில், மோசமான செயல்பாட்டின் அடிப்படையாக வைத்து, அவரை எப்படி கேப்டன் பதவியில் இருந்து நீக்குவீர்கள் என ரசிகர்கள் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் (Graeme Swann), வார்னரை கேப்டன் பதவியில் இருந்து, ஹைதராபாத் அணி நீக்கியதற்கான காரணம் என்ன என்பது பற்றி, கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த சீசனில், டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய வார்னர், மனிஷ் பாண்டே (Manish Pandey) அணியில் இடம்பெறாமல் போனதற்கு அணி நிர்வாகம் தான் பொறுப்பு என்றும், இது ஒரு கடுமையான முடிவு என்றும் தனது பேச்சில் கூறியிருந்தார்.

இதனைக் குறிப்பிட்ட கிரேம் ஸ்வான், 'மனிஷ் பாண்டே களமிறங்கமால் போனதற்கு அணி நிர்வாகம் தான் காரணம் என வார்னர் பேசியது தான் அவருக்கு பிரச்சனையாக அமைந்துள்ளது. அணி நிர்வாகத்தைச் சேர்ந்த யாரோ ஒருவருக்கு, வார்னர் பேசியது பிடிக்காமல் போயுள்ளது.


அப்படி பேசியதற்கான ஒரு தண்டனையாக தான், வார்னரை கேப்டன் பதவியில் இருந்து ஹைதராபாத் அணி நீக்கவும் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் வார்னரை ஆடும் லெவனில் எடுக்காததற்கான காரணமும் அது தான்' என கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்