இனி 'வாய' தொறந்தா மரியாதை இருக்காது...! உங்க மேல 'அன்பு' வச்சது என் தப்பு தான்...! 'எனக்கும் பேச தெரியும்...' - 'முன்னாள் வீரரை' விளாசி தள்ளிய கெயில்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

என்னை பற்றி இனி வாயை திறந்தால் மரியாதை இருக்காது என கிறிஸ் கெயில் முன்னாள் வீரரை விளாசி தள்ளியுள்ளார்.

டி-20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரவுள்ள நிலையில் உலக நாடுகள் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியலை வெளிவிட்டு வருகிறது. அதன்படி மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வீரர்களின் பெயர் பட்டியலும் வெளிவந்துள்ளது. அதில் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்லி அம்புரோஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கிரிஸ் குறித்து கர்ட்லி அம்புரோஸ் பர்டபாஸில் உள்ள தனியார் வானொலிக்கு சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது, 'என்னைப் பொறுத்தவரை மே.இ.தீவுகள் அணிக்கு கெயில் ஒரு பொருத்தமான தேர்வு இல்லை. கடந்த 18 மாதங்களாக கெயில் சரியாகவே விளையாடவில்லை.

அனைத்து போட்டிகளிலும் கெயில் பெயரளவுக்கு விளையாடி ரன்கள் சேர்த்தார். டி-20 உலககோப்பைக்கு இது போதாது. இதற்கு முன்பே உள்நாட்டுத் தொடரில் கெயில் சரியாக விளையாடாவிட்டால் அவரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யக்கூடாது என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன்.

ஆனால், இப்போது நடப்பது வேறுமாதிரி உள்ளது. என்னைப் பொறுத்தவரை கெயில் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் அல்ல' என கடுமையான தன் விமர்சனத்தை வைத்துள்ளார்.

இந்த பேட்டி குறித்து அறிந்த கிறிஸ் கெயில் செயின்ட் கிட்ஸ் நகரில் உள்ள வானொலியில் பேசும் போது கர்ட்லி அம்புரோஸின் கருத்துக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், 'எனக்கு கர்ட்லி அம்புரோஸ் மீது மிகுந்த அன்பு இருந்தது. ஆனால் இப்போது உண்மையாகவே சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கும், எனக்கும் இடையிலான பேச்சு முடிந்துவிட்டது. இதற்கு மேல் உங்களுக்கு என்னிடம் மரியாதை கிடைக்காது.

இனி என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். என் ஆழ் மனதிலிருந்து சொல்ல வேண்டும் என்றால் அவர் மீது அதிகமான மரியாதை வைத்திருந்தேன். ஆனால், கர்ட்லி அம்புரோஸ் ஓய்வு பெற்றதிலிருந்து எனக்கு எதிராக நடக்கிறார்.

ஊடகங்களில் என்னை பற்றி எதிர்க்கருத்து கூறி தன் மீதான கவனத்தை அதிகரிக்கிறார் கர்ட்லி அம்புரோஸ். என்னாலும் அவரைக் குறித்து கூறி அதுபோன்று கவனத்தை ஈர்க்க முடியும். இப்போது மே.இ.தீவுகள் அணிக்கு தேவை நம்பிக்கை.

இதுபோன்று எதிர்மறை கருத்துக்களை கூறி கர்ட்லி அம்புரோஸ் மேற்கிந்திய தீவு அணியின் ஒற்றுமையை குலைக்க வேண்டாம். தற்போது அணி தேர்வு செய்யப்பட்டுவிட்டது. எங்களுக்கு முன்னாள் வீரர்களின் ஆதரவு தேவை.

மேற்கிந்திய தீவு இதற்கு முன் டி-20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இப்போது 3-வது கோப்பைக்காக நகர்கிறது. முன்னாள் வீரர்கள் தொடர்ந்து எதிர்மறையாகப் பேசினால், கிறிஸ் கெயில் அவமரியாதையாகப் பேச வேண்டியதிருக்கும், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் கர்ட்லி அம்புரோசை வசைபாட வேண்டியதிருக்கும். அம்புரோஸிடம் கேட்டுகொள்வது ஒன்று தான் மே.இ.தீவுகள் அணியை உற்சாகப்படுத்துங்கள். ஆதரவு தாருங்கள். இதை மட்டும் அவர் செய்தலே போதும்' என கிறிஸ் கெயில் பதிலளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்