"தோனி மட்டும் காரணம் இல்ல!"... 2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து... காம்பீர் பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையை வென்றதற்கு தோனி மட்டுமே காரணமல்ல என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று இன்றோடு 9 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதிலும், இலங்கையை இறுதி ஆட்டத்தில் வீழ்த்த தோனி அடித்த சிக்ஸர் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாதது.

இந்திய அணி இலங்கையை வீழ்த்தியதற்கு இறுதிப் போட்டியில் கவுதம் காம்பீரின் பங்கு மிக முக்கியமானது. இப்போட்டியில் கவுதம் காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய தோனி 91 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், உலகக் கோப்பை வென்ற நாளை கொண்டாடிய "கிரிக்இன்ஃபோ" இணையதளம் தோனி இறுதிப்போட்டியில் சிக்ஸர் அடித்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அத்துடன் இந்த ஷாட், மில்லியன் இந்திய ரசிகர்களைக் கொண்டாட வைத்தது என எழுதியது.

இதற்கு பதிலளித்த காம்பீர், "உலகக் கோப்பையை ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திய அணியும் பயிற்சியாளர்களும் இணைந்துதான் வென்றார்கள். சிக்ஸர் மீதான உங்கள் அதீத விருப்பத்தைக் கைவிட வேண்டும்" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக, கடுமையான விமர்சனங்களை காம்பீர் சமூக வலைதளங்களில் சந்தித்து வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுப்பது போல், கிரிக்இன்ஃபோ தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியைப் புகழ்ந்து மேலும் இரு பதிவுகளை ட்விட் செய்துள்ளது. முதலாவதாக, "2011 உலக்கோப்பை இறுதிப்போட்டியின் நிறைவு தருணங்களை இன்னும் பார்த்து முடியவில்லையா? மறுபடியும் பார்க்கலாம்" என்று குறிப்பிட்டு, தோனியின் இறுதி ஷாட்களை மட்டுமே கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.

மேலும், மற்றொரு பதிவில், தோனியின் தலைமைப்பண்பு குறித்தும், 2011 உலகக்கோப்பை இறுதி ஆட்டம் குறித்தும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதில், நகை முரண் என்னவெனில், அந்த வீடியோவில் தோனியின் தலைமைப்பண்பை பாராட்டும் வகையில் காம்பீர் பேசிய காணொளியும் இடம்பெற்றுள்ளது. அவை முன்னதாகவே எடுக்கபட்டிருந்தாலும், இந்த சூழ்நிலையில் காம்பீருக்கு பதிலடி கொடுப்பது போலவே அவை பொருந்திவந்துள்ளன.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்