"கோலிகிட்ட நா பெர்சனலா கேட்டுக்கிட்டேன், ஆனா அவருதான்..."- கேப்டன்ஸி சர்ச்சைகளுக்கு நடுவே கங்குலி ஓப்பன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிகெட் அணியின் கேப்டனை மாற்றிய சர்ச்சை அணையாமல் புகைந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ- யின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணி, இன்னும் ஒரு சில நாட்களில் தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதற்கு வழக்கம் போல விராட் கோலி தான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நியமிக்கப்பட்டவர் ரோகித் சர்மா. விராட் கோலி, அணியில் இடம் பெற்றிருந்தாலும் கேப்டனாக அவரது பெயர் முன் மொழியப்படவில்லை.

இது யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்து விட்டது. இந்த முடிவு குறித்து கோலியின் சம்மதம் பெறப்பட்டதா என்றும் பிசிசிஐ தரப்பு விளக்கம் அளிக்கவில்லை. இது பற்றி பிசிசிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இனி செயல்படுவார்’ என்று மட்டும் வெறுமனே தெரிவிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வராலற்றில் தலை சிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் விராட் கோலி. குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவரின் பங்கு பெரியது. பல போட்டிகளில் ஒற்றை ஆளாக நின்று அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார். அப்படிப்பட்ட விராட் கோலிக்கு இப்படிப்பட்ட அவமானம் உரியது தானா என்று பல தரப்பினரும் சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள்.

சர்ச்சைகளைத் தொடர்ந்து கோலிக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது பிசிசிஐ தரப்பு. இருந்தும் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை.

இந்த விவகாரம் பற்றி தற்போது வெளிப்பைடாயாக பேசியுள்ள சவுரவ் கங்குலி, ‘டி20 கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் நான் தனிப்பட்ட முறையில் தெரிவித்துக் கொண்டேன். ஆனால், டி20 கேப்டன் பொறுப்புத் தனக்கு அதிக பளுவைக் கொடுப்பதாக அவர் கருதினார். அவரின் எண்ணம் தவறானதில்லை. இந்தியாவுக்காக அவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக இருந்துள்ளார்.

இந்தியாவின் கேப்டனாக அவர் பல காலம் செயல்பட்டு வந்துள்ளார். இப்படியான அதிக காலம் பிடிக்கும் வேலைகளில் இதைப் போன்ற எண்ணங்கள் வருவது சகஜம் தான். நானும் இந்திய அணிக்கு மிக நீண்ட காலம் கேப்டனாக இருந்துள்ளேன். எனக்கும் அவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய தேர்வாளர்களைப் பொறுத்தவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஒரேயொரு கேப்டன் மட்டும் தான் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால் தான் ரோகித்துக்கு இரண்டு ஃபார்மட்டுகளின் கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், தற்போது மிகச் சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்களால் மிகப் பெரும் சாதனைகளைப் புரிய முடியும் என்று நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

CRICKET, VIRAT KOHLI, KOHLI CAPTAINCY, விராட் கோலி, கங்குலி, இந்திய அணி கேப்டன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்