1 ரன்னில் ‘மிஸ்’ ஆன சதம்.. கோபத்தில் ‘பேட்டை’ தூக்கி வீசிய கெயில்.. ஆனாலும் அவரை ‘பாராட்டும்’ ரசிகர்கள்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் ஆக்ரோஷமாக பேட்டை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். இதில் மந்தீப் சிங் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்லுடன் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து வந்த நிக்கோலஸ் பூரனுடன் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்ல் ராஜஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அதேபோல் நிக்கோலஸ் பூரனும் (10 பந்துகளில் 21 ரன்கள், 3 சிக்ஸர்) தன் பங்கிற்கு சிக்ஸர்களை விளாசி தள்ளினார்.

இதில் கிறிஸ் கெய்ல் 62 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 99 ரன்களை குவித்திருந்தார். அப்போது ஜோப்ரா ஆர்சர் வீசிய கடைசி ஓவரின் 4 பந்தை எதிர்கொண்ட கெயில் எதிர்பாராதவிதமாக போல்டாகி அவுட்டானார்.

ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட கோபத்தில் கெய்ல் தனது பேட்டை தூக்கி வீசினார். ஆனால் மறு கனமே தனது விக்கெட்டை எடுத்த ஜோப்ரா ஆர்சருக்கு கை கொடுத்து சென்றார். விக்கெட்டை எடுத்த கோபத்தில் பேட்டை தூக்கி வீசினாலும், உடனே ஆர்சருக்கு கை கொடுத்த கெயிலின் ஸ்போர்ட்ஸ்மேன் பண்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்