அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ‘ஓய்வு’.. திடீரென அறிவித்த முன்னாள் ‘சிஎஸ்கே’ வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் விஜயகுமார் யோ மகேஷ் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான விஜயகுமார் யோ மகேஷ், முதல் தர கிரிக்கெட்டில் 50 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 1,119 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல் பந்து வீச்சை பொறுத்தவரை முதல் தர கிரிக்கெட்டில் 50 போட்டிகளில் 108 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 47 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு இலங்கையில் நடந்த 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா யு-19 அணியில் சார்பாக விஜயகுமார் யோ மகேஷ் விளையாடினார். அந்த தொடரில் புஜாரா, ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக யோ மகேஷ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லி டேர் டெவில்ஸ் மற்றும் சிஎஸ்கே அணி எனக்கு வாய்ப்பளித்து பெரிய லெஜண்ட்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்ள செய்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டு காலம் நான் காயங்களால் அவதியுற்றேன். ஆனால் அப்போதும் எனக்கு ஆதரவளித்த இந்தியா சிமெண்ட்ஸுக்கு என் நன்றியை சமர்பிக்கிறேன். என்னை 14 வயதிலிருந்து வளர்த்தெடுத்து 12 ஆண்டுகாலம் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பளித்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. பிசிசிஐக்கும் நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்’ என விஜயகுமார் ஜோ மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் அதிகமாக விக்கெட்டுக்களை (16) கைப்பற்றியவர் யோ மகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்