‘ஜெயிக்க வேண்டிய மேட்ச்’!.. ‘அவரை ஏன் ப்ளேயிங் 11-ல எடுத்தீங்க வார்னர்..?’.. கேப்டனை கேள்வியால் துளைத்து எடுக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ப்ரீத்வி ஷா 53 ரன்களும், ரிஷப் பந்த் 37 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 34 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். அதில் 6 ரன் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வார்னர் வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

இதில் ஆவேஷ் கான் ஓவரில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஜானி பேர்ஸ்டோ (38 ரன்கள்) அவுட்டாகினார். இதனை அடுத்து களமிறங்கிய விராட் சிங் (4 ரன்கள்), கேதர் ஜாதவ் (9 ரன்), அபிஷேக் ஷர்மா (5 ரன்), ரஷித் கான் (0), விஜய் சங்கர் (8 ரன்) என அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். ஆனாலும் மறுமுனையில் கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த சமயத்தில் களமிறங்கிய சுஜித், கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் சுஜித் 6 பந்துகளில் 14 ரன்கள் அடித்தது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் கேன் வில்லியம்சனும் 51 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை ஹைதராபாத் அணி அடித்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில் டேவிட் வார்னரும், கேல் வில்லியம்சனும் களமிறங்கினர். 1 ஓவர் முடிவில் 7 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்துக்கு ஹைதராபாத் அணி சென்றது.

இந்த நிலையில் வெற்றி பெற வேண்டிய போட்டியை ஹைதராபாத் அணி தோற்றுவிட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் அப்துல் சமத்தை எடுக்காமால் கேதர் ஜாதவ், விராட் சிங் ஆகியோரை ப்ளேயிங் லெவனில் எடுத்தது தவறு என்றும், அதேபோல் மனிஷ் பாண்டேவையும் எடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் அப்துல் சமத் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹைதராபாத் தோல்விக்கு, மிடில் ஆர்டரில் விளையாடிய வீரர்கள் சொதப்பியதே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய விராட் சிங் 4 ரன்னிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும், அபிஷேக் ஷர்மா 5 ரன்னிலும், விஜய் சங்கர் 8 ரன்னில் அவுட்டாகினர். அதேபோல் 7-வதாக களமிறங்கிய ரஷித் கான் டக் அவுட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்