ரிக்கி பாண்டிங் பண்ண ‘மிஸ்டேக்’.. ஒருவேளை இதை மட்டும் செய்யாம இருந்திருந்தா டெல்லி ‘வின்’ பண்ணிருக்குமோ..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செய்த தவறை சுட்டிக் காட்டி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா களமிறங்கினர். இதில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி ப்ரித்வி ஷா வெளியேறினார். இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்கஸ் ஸ்டோனிஸ் (Marcus Stoinis) களமிறங்கினார். முதல் 3 ஓவர்களில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி, அடுத்தடுத்த ஓவர்களில் சறுக்க ஆரம்பித்தது.

அதனால் 10 ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் மட்டுமே டெல்லி அணி எடுத்திருந்தது. அப்போது சிவம் மாவி வீசிய 12-வது ஓவரில் போல்டாகி மார்கஸ் ஸ்டோனிஸ் 23 பந்துகளில் 18 ரன்கள்) வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயருடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணியும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

அப்போது வருண் சக்கரவர்த்தி வீசிய 15-வது ஓவரில் ஷிகர் தவான் (36 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் 6 ரன்னிலும், ஹெட்மயர் 17 ரன்களிலும் அவுட்டாகினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே டெல்லி அணி எடுத்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 27 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.5 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களும், சுப்மன் கில் 46 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், மார்கஸ் ஸ்டோனிஸை 3-வது ஆர்டரில் களமிறக்கியதற்காக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை (Ricky Ponting) ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக சில போட்டிகளில் மார்கஸ் ஸ்டோனிஸ் விளையாடவில்லை. இந்த சூழலில் ப்ளே ஆஃப் போன்ற முக்கியமான போட்டியில் அவருக்கு இடம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் நேற்று மார்கஸ் ஸ்டோனிஸ் களமிறங்கிய 3-வது ஆர்டரில், வழக்கமாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார். இவர் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதால், அந்த ஆர்டரில் களமிறக்கப்படுவார். ஆனால் 11 ஓவர்கள் முடிந்த பின்னரே ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். மேலும் அப்போது அணியின் ஸ்கோரும் குறைவாக இருந்ததால், அடித்து ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால் ஸ்ரேயாஸ் ஐயர், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பெரிய ஷாட் அடிக்க முயன்றார். அதேவேளையில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்ததால் அவரால் பெரிதாக ரன்களை குவிக்க முடியவில்லை. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் முன்னமே களமிறங்கி இருந்தால், டெல்லி அணியின் ஸ்கோர் உயர்ந்திருக்கும், ஆனால் மார்கஸ் ஸ்டோனிஸை களமிறக்கி ரிக்கி பாண்டிங் தவறு செய்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மார்கஸ் ஸ்டோனிஸை அந்த ஆர்டரில் களமிறக்கியது சரியான முடிவுதான் என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்