விராட் கோலியை விட இவர் தான் இப்போ டிரெண்டிங்கே.. யார் இந்த டேனியல் கிறிஸ்டியன்..? வச்சு செய்யும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து பெங்களூரு அணி வீரர் டேனியல் கிறிஸ்டியனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் (IPL) தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 39 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 29 ரன்களும், சுனில் நரேன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் பெங்களூரு அணி வேகப்பந்து வீச்சாளர் டேனியல் கிறிஸ்டியனை (Daniel Christian) ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு குறைந்த ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதால், ஆரம்பம் முதலே ரன்கள் அதிகம் செல்லாமல் பெங்களூரு அணி கட்டுப்படுத்தி வந்தது.

அப்போது டேனியல் கிறிஸ்டியன் வீசிய 12-வது ஓவரில் 3 சிக்சர் உட்பட 22 ரன்கள் சென்றது. இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை பெங்களூரு அணியின் பக்கம் இருந்த ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது. ஆனாலும் பெங்களூரு அணியின் ஹர்சல் படேல், சஹால் போன்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர்.

அதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு கொல்கத்தா அணி வந்தது. அப்போது மேக்ஸ்வெல் கடைசி ஓவரை வீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டேனியல் கிறிஸ்டியனை கடைசி ஓவர் வீச விராட் கோலி அழைத்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஓவரின் முதல் பந்திலேயே கொல்கத்தா வீரர் ஷாகிப் அல் ஹசன் பவுண்டரி விளாசினார். இதனை அடுத்து 3 சிங்கிள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக 9 போட்டிகளில் விளையாடியுள்ள டேனியல் கிறிஸ்டியன், 14 ரன்களும் 4 விக்கெட்டும் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியுள்ள வீரரை எலிமினேட்டர் போன்ற முக்கியமான போட்டியில் அணியில் எடுத்ததற்காக பெங்களூரு அணியை, சேவாக் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்