‘அந்த மனுசன் மேல அப்படி என்னதாங்க கோபம்’!.. மறுபடியும் தோனியை வம்பிழுத்த கம்பீர்.. இப்போ என்ன சொன்னார் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியை மறைமுகமாக சாடிய கௌதம் கம்பீரை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து 166 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். அதில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி ஓவரில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

ஆனாலும் மறுமுனையில் கேப்டன் கே.எல்.ராகுல் (67 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதனால் 19 ஓவர்கள் முடிவில் 161 ரன்களை பஞ்சாப் அணி எடுத்திருந்தது. இதனை அடுத்து கடைசி ஓவரில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி இருந்தது. அப்போது வெங்கடேஷ் ஐயர் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் கே.எல்.ராகுல் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த சமயத்தில் களத்தில் இருந்த தமிழகத்தை சேர்ந்தவரும் பஞ்சாப் அணி வீரருமான ஷாருக்கான் (9 பந்துகளில் 22 ரன்கள்) சிக்சர் அடித்து அசத்தினார். அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், போட்டி முடிந்தபின் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரிடம் (Gautam Gambhir) ஃபினிஷர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘கடைசியில் களமிறங்கி போட்டியை மாற்றினால் ஃபினிஷரா? ரசலை (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்) ஃபினிஷர் என்று கூறுகின்றனர். ஆனால் என்னைக் கேட்டால் விராட் கோலியை தான் ஃபினிஷர் என்று கூறுவேன்.

விராட் கோலி போன்ற வீரர்கள் தான் 3-வது ஆர்டரில் களமிறங்கி கடைசி வரை விளையாடுவார்கள். அதனால் அவர்களால் ஆட்டத்தை மாற்ற முடியும். புள்ளி விவரங்களை பார்த்தாலே தெரியும் யார் ஃபினிஷர் என்று. எப்போதும் ஃபினிஷர் (So-called finisher) என்று அழைக்கப்படும் (தோனி) சிலரை விட கோலிதான் சிறந்த ஃபினிஷர்’ என தோனியை மறைமுகமாக கௌதம் கம்பீர் விமர்சனம் செய்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனுமான தோனி (Dhoni) பல போட்டிகளில் கடைசி வரை விளையாடி வென்று கொடுத்துள்ளார். அதனால் பலரும் அவரை சிறந்த ‘ஃபினிஷர்’ என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில், கொல்கத்தா-பஞ்சாப் அணிக்கு இடையேயான போட்டியில் ஃபினிஷர் குறித்து எழுந்த கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் தோனியை சாடியுள்ளார். இதனால் ரசிகர்கள் கம்பீரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்