"பும்ரா என்னங்க பும்ரா... அவர விட இவரு தான் 'best'... ஆனா என்ன 'டீம்'ல 'சான்ஸ்' தான் கெடைக்கல..." ஏங்கும் 'ரசிகர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் நாளை மோதுகின்றன. முன்னதாக, கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணிய எதிர்கொண்ட ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சந்தீப் சர்மா தொடர்பான புள்ளி விவரம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. இந்திய அணியில் தற்போதுள்ள பந்து வீச்சாளர்களில் மிகவும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர் பும்ரா. இந்திய அணியில் மட்டுமில்லாதது உலக கிரிக்கெட் அளவிலும் மிக சிறப்பாக செயல்படக் கூடியவர்.

ஆனால், சந்தீப் சர்மா குறித்து தெரிவிக்கும் புள்ளி விவரம் ஒன்று பும்ராவையே பின்னுக்குத் தள்ள வைத்துள்ளது. சர்வதேச அணியில் சந்தீப் சர்மாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் ஆடி வருகிறார். பும்ரா மற்றும் சந்தீப் சர்மா ஆகிய இருவரும் இதுவரை 90 ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியுள்ளனர்.

இதில் பும்ரா 105 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், சந்தீப் சர்மா 108 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே போல பந்து வீச்சு சராசரியிலும் பும்ராவை விட சந்தீப் சர்மா தான் முன்னிலையில் இருக்கிறார். அது மட்டுமில்லாமல், ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜாகிர் கானின் சாதனையையும் நேற்றைய போட்டியில் சந்தீப் சர்மா முறியடித்தார்.

இது தொடர்பான பதிவுகளை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இப்படி ஒரு சிறந்த பந்து வீச்சாளருக்கு சர்வதேச அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் ஏங்கி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்