"உங்கள எப்ப தான் 'டீம்'ல பாக்குறது??.." ஆவலுடன் 'ரசிகர்' கேட்ட 'கேள்வி'.. அசத்தல் 'பதில்' சொல்லி நெகிழ வைத்த 'தாஹிர்'.. வைரலாகும் 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றிருந்தது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் மும்பை மைதானத்தில், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிக அற்புதமாக பந்து வீசி அசத்தினர். மொயின் அலி 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த சீசனுக்கு முன்பாக நடைபெற்ற ஏலத்தில், மொயின் அலியை ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கியிருந்த நிலையில், இந்த சீசனின் சென்னை அணி ஆடியுள்ள 3 போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மொயின் அலி ஆல் ரவுண்டர் பெர்பார்மன்ஸ் செய்து அசத்தி வருகிறார்.

மொயின் அலி நல்ல ஃபார்மில் உள்ளதால், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (Imran Tahir) போட்டிகளில் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே (CSK) அணிக்காக ஆடி வரும் இம்ரான் தாஹிர், கடந்த சீசனில் 3 போட்டிகள் மட்டுமே ஆடியிருந்தார்.

இந்த சீசனிலும், சிஎஸ்கே அணியில் ஆடி வரும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது சந்தேகம் தான். இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர் ஒருவர், இம்ரான் தாஹிரிடம், 'நீங்கள் சென்னை அணியில் களமிறங்குவதை எப்போது பார்க்கலாம்?' என கேள்வி எழுப்பியிருந்தார்.

ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த இம்ரான் தாஹிர், 'சென்னையில் தற்போது சிறந்த வீரர்கள் உள்ள நிலையில், அவர்கள் அணிக்காக நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார்கள். அணியின் நலனுக்காக அவர்கள் தொடர்ந்து ஆட வேண்டும். எனக்கு என்ன தேவை என்பதை விட, அணிக்கு என்ன தேவை என்பது தான் இப்போது முக்கியம்.


இப்படி ஒரு அற்புதமான அணியில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. சில நேரம் அணிக்குத் தேவை என்றால், நிச்சயம் நான் களமிறங்கி, என்னால் முடிந்ததை அணிக்காக செய்வேன்' என பெருமிதத்துடன் தாஹிர் குறிப்பிட்டுள்ளார்.

 

42 வயதாகும் இம்ரான் தாஹிர், சென்னை அணிக்காக ஆடி வருவது முதல், அதிகம் தமிழிலேயே ட்வீட் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல், ஒரு அணியாக இல்லாமல், குடும்பம் போல தாஹிர் பழகி வரும் நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்காத போதும், அணியின் நன்மை எதுவோ, அது தான் முக்கியம் எனக் கூறியுள்ளது, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்