VIDEO: ‘சிரிப்பை அடக்க முடியலடா சாமி’ ரோஹித் அவுட்டானதும் கோலி வருவார்ன்னு பார்த்தா... இது யாருய்யா புதுசா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோஹித் ஷர்மா அவுட்டானதும் விராட் கோலி பேட்டிங் செய்ய வரும்போது நடந்த விநோத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ஒரு வீரர் கூட 20 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா மட்டுமே 19 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 432 ரன்களை குவித்தது. இதில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 121 ரன்கள் அடித்தார். இதன்மூலம் இந்த தொடரில் தொடர்ந்து 3 சதங்களை விளாசி அசத்தினார். அதேபோல் இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் (70 ரன்கள்), ஹசீப் ஹமீது (68 ரன்கள்), ரோரி பர்ன்ஸ் (61 ரன்கள்) உள்ளிட்டோரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இதில் தொடக்க ஆட்டகாரர்களான கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, ரோஹித் ஷர்மா 59 ரன்கள் அடித்து அசத்தினார். தற்போது புஜாரா 91 ரன்களும், கேப்டன் விராட் கோலி 45 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில், ரோஹித் ஷர்மா அவுட்டாகி வெளியேறியதும், 4-வது வீரராக விராட் கோலி களமிறங்க வந்துகொண்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக இந்திய ஜெர்சி மற்றும் மாஸ்க் அணிந்துகொண்டு ஜார்வோ என்ற நபர் பேட்டிங் செய்ய மைதானத்துக்குள் நுழைந்தார். கிரிக்கெட் வீரர் போல சர்வ சாதாரணமாக, க்ரீஸுக்கு முன் பேட்டிங் செய்ய ஆயத்தமானார்.

இதனை கவனித்த அம்பயர் உடனே பாதுகாப்பு அதிகாரிகளை வரவழைத்து அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற கூறினார். ஆனால், வெளியேற மாட்டேன் என அடம்பிடித்த ஜார்வோவை குண்டுக்கட்டாக தூக்கி அதிகாரிகள் வெளியேற்றினர்.

இவர் இதற்கு முன்பு 2-வது டெஸ்ட் போட்டியின் போதும் இதேபோல், இந்திய அணியினருடன் பீல்டிங் செய்ய மைதானத்துக்குள் நுழைந்து வந்து கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜார்வோவின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி அவர் எப்படி மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்தார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்