‘போராடி தோத்த வலியே இன்னும் ஆறல’!.. அதுக்குள்ள அடுத்த அதிர்ச்சியா..! வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுற மாதிரி வந்த செய்தி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 15-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் களமிறங்கினர். கடந்த 3 போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்திருந்த இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். மறுபக்கம் டு பிளசிஸும் சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். இந்த கூட்டணி 12 ஓவர்களில் 115 ரன்கள் அடித்து, கொல்கத்தா அணியை அதிர வைத்தது.

இதனை அடுத்து வருண் சக்கரவர்த்தி வீசிய 13-வது ஓவரில் ருதுராஜ் கெய்வாட் (64 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலி 12 பந்துகளில் 25 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்து அவுட்டானார். இதன்பின்னர் சுரேஷ் ரெய்னா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் தோனி பேட்டுடன் மைதானத்துக்குள் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். தோனியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, 8 பந்துகளில் 17 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அவுட்டாகினார்.

இதனை அடுத்து களமிறங்கிய ஜடேஜா, தான் எதிர்கொண்ட போட்டியின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து முடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களை சென்னை அணி குவித்தது. இதில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 95 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தியது. ஆனால் ஆரம்பமே அந்த அணி அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ரானா 9 ரன்னிலும், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். இவர்களை தொடர்ந்து வந்த ராகுல் திருப்பதி (8 ரன்கள்), கேப்டன் இயான் மோர்கன் (7 ரன்கள்), சுனில் நரேன் (4 ரன்கள்) என அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 31 ரன்களை 5 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்-ஆண்ட்ரே ரசல் கூட்டணி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதனால் போட்டி மெல்ல கொல்கத்தாவின் பக்கம் திரும்பியது. இதில் ரசல் 22 பந்துகளில் 54 ரன்களும், தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்களும் அடித்து மிரள வைத்தனர்.

ரசல் ஆடிய அதிரடி ஆட்டம் கொல்கத்தா அணிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் இவரது விக்கெட்டை எடுக்க சென்னை அணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது சாம் கர்ரன் வீசிய 12-வது ஓவரில், போல்டாகி ரசல் வெளியேறினார். சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவுட்டான சோகத்தில் கேலரி படிக்கட்டுகளில் சோகமாக ரசல் அமர்ந்துவிட்டார்.

இதனை அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் (34 பந்துகளில் 66 ரன்கள்) யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு கொல்கத்தா அணி வந்தது. ஆனால் 9 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

இந்த சமயத்தில் கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்ற பிரஷாத் கிருஷ்ணா ரன் அவுட்டாகினார். இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. கடைசி வரை போராடி நூலிழையில் வெற்றியை நழுவ விட்டது கொல்கத்தா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி (slow over rate) விளையாடியதற்காக, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக கொல்கத்தா அணிக்கு அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்