"யாரு என்ன வேணா சொல்லட்டும்.. நான் எடுத்த முடிவு 'கரெக்ட்' தான்.." கடுமையான விமர்சனத்தை சந்தித்த 'மோர்கன்'.. துணிச்சலுடன் சொன்ன 'பதில்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தது. அந்த அணி வீரர்களான மேக்ஸ்வெல் (Maxwell) மற்றும் டிவில்லியர்ஸ் (Devilliers) ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். முன்னதாக, இரண்டாவது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி (Varun Chakravarthy), கோலி மற்றும் ரஜத் பட்டிதர் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் சாய்த்தார்.

இதனால், பவர் பிளேயில் மீண்டும் வருண் பந்து வீசுவார் என எதிர்பார்த்த நிலையில், கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன், வேறு பந்து வீச்சாளர்களை கொண்டு, பந்து வீசச் செய்தார். மோர்கனின் இந்த முடிவு, கடுமையான விமர்சனத்தை பெற்றது. இதற்கு காரணம், மேக்ஸ்வெல் களமிறங்கும் போது வருண் சக்ரவர்த்தி பந்து வீசியிருந்தால், நிச்சயம் மேக்ஸ்வெல்லிற்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால், மேக்ஸ்வெல் செட்டான பிறகு, வருண் சக்ரவர்த்தி பந்து வீச வந்ததால், அவரது பந்து வீச்சு பெரிய அளவில் ஈடுபடவில்லை.

இதனால், மோர்கனின் இந்த தவறான முடிவு குறித்து பேசிய கம்பீர் (Gambhir), இப்படி ஒரு மோசமான கேப்டன்சியை எனது வாழ்வில் நான் பார்த்ததேயில்லை என விமர்சித்திருந்தார். இந்நிலையில், வருணுக்கு ஏன் அதன் பிறகு பவர் பிளேயில் பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது பற்றி, இயான் மோர்கன் (Eoin Morgan) கருத்து தெரிவித்துள்ளார்.

'வருணுக்கு பவர் பிளேயில் இரண்டாவது ஓவரைக் கொடுக்காமல் போனதில் தவறு ஒன்றுமில்லை. மேக்ஸ்வெல் அபாயகரமான வீரர் தான். ஆனால், பெங்களூர் அணியில் அவர் மட்டுமே ஆபத்தான வீரர் கிடையாது. டிவில்லியர்ஸ் மாதிரியான ஒரு வீரருக்கு சில ஓவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.

அதனால் தான் வருணை பவர் பிளேயில் மீண்டும் பந்து வீசச் செய்யவில்லை. அனைத்து அணிகளுக்கும் தங்களுக்கென சில பலன்கள் உள்ளது. எனவே, குறிப்பிட்ட ஒரு வீரருக்காக மட்டும் திட்டங்களை வகுக்க முடியாது' என மோர்கன் தான் செய்த செயலுக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்