'ஐபிஎல்' போட்டிகளுக்கு வரப் போகும் 'சிக்கல்'??.. 'இங்கிலாந்து' அணி அதிகாரி வெளியிட்ட 'முக்கிய' தகவல்.. "பெரிய 'டீம்'க்கு எல்லாம் அப்போ 'தலைவலி' தான் போல!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் நடைபெற்று வந்த 14 ஆவது ஐபிஎல் தொடர், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு நாடுகளில் வைத்து நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, இந்திய அணி அடுத்ததாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதியன்று எதிர்கொள்ளவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி ஆடவுள்ளது.

இந்த இரு தொடர்களுக்கு பிறகு தான் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியும் என்பதால், செப்டம்பர் மாதம் பாதியில் ஆரம்பித்து, அக்டோபர் மாதம் வரை போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரை மாற்றி வைக்குமாறு, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்ட போதும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.

அதே வேளையில், அக்டோபர் மாதத்திற்கு பிறகு, டி 20 உலக கோப்பை போட்டிகளும் நடைபெறுவதால், அதற்கு முன்பாக ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு, டி 20 உலக கோப்பை போட்டிகளும் இருப்பதால், மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஆஷ்லே கில்ஸ் (Ashley Giles), மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில், இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பார்களா, மாட்டார்களா என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

'செப்டம்பர் மாதம், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கலாம் என முடிவு எடுத்துள்ளோம். ஆனால், ஓய்வு அளிப்பது என்பது, எங்களது வீரர்கள் வேறு தொடர்களில் சென்று விளையாட வேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் டி 20 உலக கோப்பை மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக அதிகம் திட்டமிட்டுள்ளோம்.

இந்திய டெஸ்ட் தொடர் முடிந்த கையுடன், அடுத்தடுத்து தொடர்கள் உள்ளது. செப்டம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி, வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம். அதன் பிறகு, பாகிஸ்தான் தொடர், டி 20 உலக கோப்பை என எங்களுக்கு முழுமையான அட்டவணைகள் உள்ளது' என தெரிவித்துள்ளார்.

ஆஷ்லே கில்ஸ் கருத்துப் படி பார்த்தால், ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதாக கூறப்படும் சமயத்தில், இங்கிலாந்து வீரர்கள் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். இதனால், அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த முடிவால், அந்த அணியின் பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ள ராஜஸ்தான், சென்னை உள்ளிட்ட ஐபிஎல் அணிகளுக்கு மிகவும் பின்னடைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்