‘மைதானத்தில் திட்டிய ரசிகர்’... ‘கலங்கிய ஆர்ச்சர்’... 'மன்னிப்புக் கோரிய கேப்டன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சளாரான ஜோப்ரா ஆர்ச்சரை, மைதானத்தில் நியூசிலாந்து ரசிகர் ஒருவர், நிறத்தை குறிப்பிட்டு அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கானுயி என்ற இடத்தில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. இந்தப்போட்டியின்போது, பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த ஆர்ச்சரை, நியூசிலாந்து ரசிகர் ஒருவர், நிறவெறி குறித்த வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மனம் கலங்கிப்போன 24 வயதான ஆர்ச்சர், இதுகுறித்து தனது ட்விட்டரில், ‘இந்த வாரம் போட்டியைக் காண வந்த பார்வையாளர்களின் ஆதரவு, என்னை வெகுவாகக் கவர்ந்தது, அந்த ஒரு நபரை தவிர. அவர் என் இனத்தை அவமதிக்கும் வாசகங்களைத் தொடர்ந்து கூச்சலிட்டு வந்ததால், எனது அணியைக் காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அவை என்னை வெகுவாக தொந்தரவுசெய்தன’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து, நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு ட்விட்டரில் ‘ஜோப்ரா ஆர்ச்சருக்கு நடந்துள்ள இத்தகைய நிகழ்வு எங்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. எங்கள் நாட்டின் ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது துரதிருஷ்டமானது. இங்கிலாந்து வீரர்கள் என்றும் எங்களுக்கு விளையாட்டில் மட்டும் எதிரிகளே தவிர, இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்று அந்த ட்வீட்டில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த ரசிகரை அப்போது கண்டுபிடிக்க முடியாத போதும், தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இதற்கு காரணமானவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் இயக்குநர் ஆஷ்லே கைல்ஸ், ‘வேகமாக வளர்ந்துவரும் ஜோப்ரா ஆர்ச்சருக்கு, இது போன்ற செயல்கள் மிகுந்த கவனச்சிதறல்களை ஏற்படுத்தும். எனினும், எங்களது முழு ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு’ என்றார்.
மற்ற செய்திகள்