VIDEO: ‘என்னய்யா இப்படி பண்ணிட்டீங்க’.. சல்லி சல்லியா நொறுங்கிய டாப் ஆர்டர்.. அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று (25.08.2021) லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டிய போட்டியை நழுவவிட்டதால் இங்கிலாந்து அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதனால் இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடுவோம் என அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறினார். அதேபோல் வெற்றி பெற்ற வேகத்துடன் இந்திய அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.

இந்த நிலையில், லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து கே.எல்.ராகுல் டக் அவுட்டானார்.

இதனை அடுத்து களமிறங்கிய புஜாரா (1 ரன்) நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த இக்கட்டான சமயத்தில் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவரது ஆட்டமும் நீண்ட நேரத்துக்கு நிலைக்கவில்லை. 7 ரன் எடுத்திருந்தபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 11-வது ஓவரில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து கோலியும் அவுட்டானார்.

இதனால் 21 ரன்களுக்கு 3 டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது. தற்போது ரோஹித் ஷர்மா-ரஹானே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லார்ட்ஸில் தோல்வி அடைந்ததற்கு பழிதீர்க்கும் விதமாக இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக விளையாடி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்