பக்கத்துல யாரும் இல்ல.. சோகமாக உட்கார்ந்திருந்த அஸ்வின்.. நொறுங்கிப்போன ரசிகர்கள்.. அஸ்வினுக்கு ஆதரவாக களமிறங்கிய ‘இங்கிலாந்து’ வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து பலரும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது

இந்த நிலையில் இந்த தொடரில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இரு அணிகளும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடி வருகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா இடம்பெற்று வருகிறார்.

இந்திய அணியில் மாற்றங்கள் செய்தாலும், அஸ்வினுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷர்துல் தாகூர் மற்றும் உமேஷ் யாதவ் மட்டுமே புதிதாக இடம்பெற்றனர்.

இந்த சூழலில் டாஸ் போட்டு முடித்ததும், அஸ்வின் இடம்பெறாதது குறித்து கேப்டன் கோலியிடம் வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ‘இங்கிலாந்து அணி 4 இடதுகை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகிறது. அதனால் அவர்களுக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார், பேட்டிங்கிலும் பக்கபலமாக இருப்பார்’ என கோலி பதிலளித்தார்.

கோலியின் இந்த பதில் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் அஸ்வின்தான். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் 4-வது இடத்தில் இருந்து வருகிறார். அதனால் கோலியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இதுகுறித்து ட்வீட் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், ‘உண்மையாகவே இரு அணிகளுக்கும் வெற்றிக்கான வாய்ப்புள்ளது. ஒருவேளை அஸ்வின் விளையாடினால் இங்கிலாந்து வெல்ல வாய்ப்பில்லை. அவர் இல்லாமல் விளையாடினால் இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ளது’ என பதிவிட்டுள்ளார். அதேபோல் ரசிகர்கள் பலரும் ஓவல் மைதானத்தில் தனியாக அமர்ந்திருந்த அஸ்வினின் புகைப்படத்தை பதிவிட்டு  ‘மிஸ் யூ அஸ்வின்’ என அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 466 ரன்களையும் இந்தியா எடுத்தது. அதேபோல் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்தது. அதனால் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்