VIDEO: டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ‘அவசர அவசரமாக’ ஓடி வந்த டிராவிட்.. தம்பி மூலம் தீபக் சஹாருக்கு பறந்த மெசேஜ்.. மேட்சோட ‘ஹைலைட்டே’ இதுதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது கடைசி நேரத்தில் தீபக் சஹாருக்கு ராகுல் டிராவிட் சொல்லி அனுப்பிய தகவல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கைகு எதிரான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 275 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அலசங்கா 65 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ஆனால் ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ப்ரித்வி ஷா (13 ரன்கள்), ஷிகர் தவான் (29 ரன்கள்), இஷான் கிஷன் (1 ரன்), மனிஷ் பாண்டே (37 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

இந்த சமயத்தில் பொறுப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனாலும் 193 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.

இந்த சூழ்நிலையில், ஜோடி சேர்ந்த தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர் குமார் கூட்டணி சிறப்பாக விளையாடி 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இக்கட்டான சூழலில் அணி இருந்த போது, இவர்கள் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தீபக் சஹார் 69 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தீபக் சஹாரின் விக்கெட் மட்டும் விழுந்திருந்தால், இந்தியா தோல்விடைந்திருக்க கூடும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீபக் சஹார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடியதற்கு பின்னால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் திட்டம் இருந்துள்ளது. போட்டியின் கடைசி கட்டம் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டு இருந்தது.

அப்போது போட்டியின் 45-வது ஓவரின் போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து அவசர அவசரமாக வீரர்கள் அமரும் டக் அவுட்டிற்கு வந்தார். அங்கு பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தயாராக இருந்த தீபக் சாஹரின் சகோதரர் ராகுல் சஹாரிடம் முக்கிய செய்தி ஒன்றை கூறினார். அதாவது, தீபக் சஹார் சற்று ஆக்ரோஷமாக விளையாடுவதாக தெரிகிறது. தற்போது அத்தகைய ஷாட்கள் தேவையில்லாத ஒன்று. அதனால் ரிஸ்க்கான ஷாட்களை ஆடி விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இதனை அடுத்து போட்டியின் 47-வது ஓவரின் போது தண்ணீர் கொடுக்க சென்ற ராகுல் சஹார், தனது சகோதர் தீபக் சஹாரிடம் அதனை கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது தீபக் சஹாரின் விக்கெட் இலங்கை அணிக்கு முக்கியமாக பார்க்கப்பட்டது. அவரை வீழ்த்திவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என, தீபக் சஹாரை அவுட்டாக்குவதில்தான் இலங்கை வீரர்கள் மும்முறமாக இருந்தனர். ஆனால் கடைசி வரை நிதானமாக விளையாடி அணிக்கு தீபக் சஹார் வெற்றி தேடி தந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்