"அந்த 'பையன' கண்டிப்பா 'செலக்ட்' பண்ணியிருக்கணும்.." 'இளம்' வீரருக்கு ஆதரவாக 'குரல்' கொடுத்த 'டிராவிட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல், 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டிக்கான இந்திய அணியும், சில தினங்களுக்கு முன் அறிவிக்கபட்டிருந்தது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், இந்திய அணி ஆடவுள்ளது.

இது இரண்டிற்கும் சேர்த்து, மொத்தம் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த தொடருக்காக சில இந்திய வீரர்கள் அணியில் இடம்பெறாமல் போனது, அதிகம் கேள்விகளை எழுப்பி வருகிறது. புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, பிரித்வி ஷா உள்ளிட்ட சிலர் ஏன் இடம்பெறாமல் போனார்கள் என பல கிரிக்கெட் பிரபலங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் தேர்வு குறித்து, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டும் (Rahul Dravid) சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'இந்திய அணி நல்ல பேலன்ஸான அணியாக தற்போது உள்ளது. 20 பேர் கொண்ட அணியில், குல்தீப் யாதவ் நிச்சயம் இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், அண்மைக்காலத்தில் ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் சுந்தர் ஆகியோர், சிறப்பாக ஆடியதன் காரணமாக, அவர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் சுந்தர் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்களும், பந்து வீச்சில் மட்டுமில்லாது, பேட்டிங்கிலும் நன்றாக ஆடக் கூடியவர்கள்.


இதனால், இந்திய அணியின் பேட்டிங் பலமும் அதிகரிக்கும். எனவே, அணியின் சிறந்த ஆடும் லெவனைக் கருத்தில் கொண்டு தான், இந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என நான் கருதுகிறேன். இதன் காரணமாக, குல்தீப் யாதவைத் தவற விட்டனர்' என டிராவிட் கூறியுள்ளார்.

இளம் வீரர் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), தனது ஆரம்ப காலத்தில், சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சில தொடர்களில் சொதப்பியதன் காரணமாக, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்