ரிஷப் பந்த் மீது அடுக்கடுக்காக விழுந்த விமர்சனம்.. எல்லாத்தையும் மொத்தமாக ‘ஆஃப்’ பண்ணிய விராட் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் இளம்வீரர் ரிஷப் பந்த் மீதான விமர்சனத்துக்கு கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதனால் இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இளம்வீரர் ரிஷப் பந்தின் ஆட்டம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ரிஷப் பந்த் ஆட்டம் குறித்து பேசியபோது, இந்த இறுதிப்போட்டியில் ஒரு கோடீஸ்வரர் போல் ரிஷப் பந்த் விளையாடியதாகவும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாடியதுபோல் இதில் சிறப்பாக விளையாடவில்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பந்த் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். அதில், ‘ரிஷப் பந்த் தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தனது திறமையை நிரூபித்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அவர் அணியின் சூழ்நிலையை நன்றாக உணர்ந்து கொண்டுதான் விளையாடுகிறார். சில நேரங்களில் அவர் விளையாடும் விதம் பலன் கொடுக்காது. அப்போதெல்லாம் அவரின்மேல் விமர்சனங்கள் எழும். விளையாட்டில் இது எப்போதுமே நிகழும் ஒன்றுதான்.

அதற்காக நாங்கள் அவருடைய பேட்டிங் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று எந்த நிபந்தனையும் வைக்கப்போவதில்லை. எதிரணியின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக, அவர் அப்படி விளையாடித்தான் ஆக வேண்டும். அது எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த வீரராக வருவார்’ என விராட் கோலி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்