‘ஒரு மேட்ச் வச்சு முடிவு பண்ணாதீங்க’.. கொஞ்சம் இந்த மேட்சை பாருங்க அவர் யாருன்னு தெரியும்.. முகமது ஷமிக்கு குவியும் ஆதரவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது கிடையாது. உலகக்கோப்பையில் இதுவரை 12 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் அனைத்து தடவையும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழலில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் முதல் முறையாக வீழ்த்தியுள்ளது.

அதனால் இந்திய வீரர்களை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை (Mohammed Shami) மதரீதியாக அவதூறு பரப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்தவே, இந்திய வீரர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் முகமது ஷமிக்கு ஆதவராக குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், முகமது ஷமிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில், ‘ஒரு மோசமான நாளை வைத்துக்கொண்டு அந்த வீரரின் மதிப்பை மறந்துவிடக்கூடாது. நீங்கள் ஒரு அணியை ஆதரித்தால், அதில் உள்ள ஒவ்வொரு வீரரையும் தான் ஆதரிக்க வேண்டும்’ என தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இருந்தது. அப்போது கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், விவிஎஸ் லட்சுமண், இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் முகமது ஷமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்