பரபரப்பை கிளப்பிய ‘அஸ்வின்-இயான் மோர்கன்’ மோதல்.. எதுக்காக ரெண்டு பேரும் ‘சண்டை’ போட்டாங்க..? மவுனம் கலைத்த தினேஷ் கார்த்திக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனிடம் அஸ்வின் சண்டையிட்டதற்கான காரணத்தை தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் தலா 39 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 18.2 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 36 ரன்களும், சுப்மன் கில் 30 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்துக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், இப்போட்டியின் நடுவே கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனுக்கும் (Eoin Morgan), டெல்லி அணியின் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கும் (Ashwin) இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தமிழக வீரரும், கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik), அஸ்வினை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதனை அடுத்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது, இயான் மோர்கனின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அப்போது ஆக்ரோஷமான அஸ்வின், இயான் மோர்கனைப் பார்த்து ஏதோ சொல்லிவிட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், போட்டி முடிந்த பின் பேட்டியளித்த தினேஷ் கார்த்திக்கிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ராகுல் திரிபாதி பந்தை த்ரோ செய்தபோது, அது பேட்ஸ்மேனின் மேலே பட்டு சிறிது தூரம் சென்றது. அதனால் ரிஷப் பந்தை அஸ்வின் ஒரு ரன்னுக்கு அழைத்தார். ஆனால் இயான் மோர்கன் இதை விரும்பவில்லை. அதுதான் பிரச்சனை.

ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டின் (Spirit of cricket) படி பேட்ஸ்மேனின் மேல் பந்து பட்டு செல்லும்போது ரன் ஓடக்கூடாது என நினைப்பவராக இயான் மோர்கன் இருக்கலாம். இதுவொரு சுவாரஸ்யமான விஷயம் தான். எனக்கும் இதுகுறித்து தனிப்பட்ட கருத்து உள்ளது, ஆனால் அது இப்போது தேவையில்லை. இந்த விவகாரத்தில் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி’ என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்