"3 வருஷம் ஆச்சு அவரை இப்டி பாத்து.." ஐபிஎல் தொடருக்கு பின் தினேஷ் கார்த்திக்கிற்கு அடித்த ஜாக்பாட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று (22.05.2022) நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இதனிடையே, ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி களமிறங்கவுள்ள சர்வதேச தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 5 டி 20 போட்டி கொண்ட தொடர், ஜூன் மாதம் 9 ஆம் தேதி, இந்தியாவில் வைத்து ஆரம்பமாக உள்ளது. இதற்கான இந்திய அணி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு

கோலி, ரோஹித், பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல, ருத்துராஜ், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உம்ரான் மாலிக் பேரும் இருக்கு..

இது ஒருபுறம் இருக்க, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 150 கி.மீ வேகத்திற்கு பந்து வீசி அச்சுறுத்தி இருந்த உம்ரானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு  கொடுக்கப்பட வேண்டும் என பல கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல, இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பெயரும் இடம்பெற்றுள்ளது.

3 வருடங்களுக்கு பிறகு..

காயத்தால் ஆடாமல் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியை அற்புதமாக தலைமை தாங்கி, தனது ஆல் ரவுண்டர் திறமையையும் நடப்பு ஐபிஎல் தொடரில் நிரூபித்திருந்தார். அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விட, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடைசியாக, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையின் இந்திய அணியில், தினேஷ் கார்த்திக் இடம்பிடித்திருந்தார். இதன் பின்னர், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார். தொடர்ந்து, நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காக ஆடி வரும் தினேஷ் கார்த்திக், பல போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெறவும் காரணமாக அமைந்திருந்தார்.

இதனால், அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய திறனை நிரூபித்து, அவர் டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பிடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 

DINESHKARTHIK, IND VS SA, UMRAN MALIK, KL RAHUL, தினேஷ் கார்த்திக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்