'மஞ்ச்ரேக்கர்' சொன்ன கருத்தால் வெடித்த 'சர்ச்சை'.. "இது எல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்ல.." 'அஸ்வினுக்கு' ஆதரவாக களமிறங்கிய 'இந்திய' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்து அணியை, சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18 தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் சந்திக்கவுள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில், தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் (Ravichandran Ashwin) இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வரை எடுத்து அசத்தியுள்ள அஸ்வின், பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் சுழற்பந்து வீச்சாளர்களில், தலைச்சிறந்த ஒருவராகவும் அவர் திகழ்கிறார்.

பல முன்னாள் வீரர்கள், தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும், இன்னும் பல சாதனைகளை அஸ்வின் முறியடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார் என்றும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இதனிடையே, சில தினங்களுக்கு முன், இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar), அனைத்து காலத்திற்கும் ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக அஸ்வினை என்னால் கருத முடியாது என்றும், இந்தியாவில் சிறப்பாக செயல்படும் அஸ்வின், SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்) இதுவரை 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

மஞ்ச்ரேக்கரின் கருத்து, ரசிகர்கள் மத்தியில் அதிகம் கோபத்தைக் கிளப்பியிருந்தது. டெஸ்ட் போட்டியின் தலைச் சிறந்த வீரர் பற்றி, இப்படி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியதற்கு, சில கிரிக்கெட் பிரபலங்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik), அஸ்வினுக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

'அஸ்வின் என்று வரும்போது, SENA நாடுகளில் அவர் செய்த பெர்ஃபார்மன்ஸ் பற்றித் தான் பேசப்படுகிறது. இது மிகவும் நியாயமற்றது என்று தான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் அவர் பந்து வீசியதைப் பார்த்தால், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை உருவாக்கி, சிறந்த பேட்ஸ்மேன்களையும் மிக திறமையாக அவுட் செய்திருந்தார்.

ஒரு எதிரணியில் இருந்து கொண்டு, அஸ்வினை நாம் பார்த்தால், அவரது பந்து வீச்சை மிகவும் கவனமாக கையாள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில், அஸ்வின் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர். எப்போதும் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர். இந்திய அணி வெளிநாடு செல்லும் போது, தன்னிடம் இருந்து அணிக்கு என்ன தேவைப்படும் என்பதை அறிந்து கொண்டு, அதனை சிறந்த முறையில் நிறைவேற்ற முயற்சிப்பார் என நான் நினைக்கிறன்' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன் மீது வைத்த விமர்சனத்திற்கு, நக்கலாக மீம் ஒன்றை தனது பதிலாக, ட்விட்டரில் அஸ்வின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்