‘போட்றா வெடியை’!.. இளம் ‘தமிழக’ வீரரை அதிக விலைக்கு எடுத்த அணி.. பஸ்ஸுக்குள் பறந்த ‘விசில்’ சத்தம்.. கொண்டாடித்தீர்த்த தினேஷ் கார்த்திக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஒருவர் எடுக்கப்பட்டபோது, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் விசில் அடித்துக் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

14-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம் வீரர்களை எடுப்பதில் பல அணிகளும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

ஏலத்தில் போது ஷாருக்கானை எடுப்பதற்கு முதலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆர்வம் காட்டியது. இதனை அடுத்து பெங்களூரு அணியும் போட்டியில் சேர்ந்தது. இரு அணிகள் போட்டிப்போட்டு கொண்டு ஏலம் கேட்க, ஏலத்தொகை 2 கோடியை தாண்டிச் சென்றது. இதனால் டெல்லி அணி பின்வாங்கியது.

டெல்லி பின் வாங்கியதும், பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூருக்கு போட்டியாக ஏலம் கேட்க தொடங்கியது. இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், கடைசியாக ஷாருக்கானை பஞ்சாப் அணி ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஷாருக்கானை ஏலம் எடுத்த உடனே அருகில் இருந்த கொல்கத்தா அணி அதிகாரிகளை திரும்பி பார்த்த பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி சிந்தா, மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். ஏனென்றால் கொல்கத்தா அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்தவரான ஷாருக்கான், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் இதுவரை 31 டி20 போட்டிகளில் விளையாடி 293 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டக் கோப்பையில் தனது அதிரடி ஆட்டத்தால் 88 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அப்போது ஷாருக்கானை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிகழும் என சொல்லப்பட்டது. அதுபோலவே, அடிப்படை விலை 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்ட ஷாருக்கானை, பஞ்சாப் அணி போட்டிப்போட்டு கொண்டு 5.25 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட தமிழக கிரிக்கெட் வீரர்கள் போட்டி ஒன்றிற்காக பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது ஐபிஎல் ஏலத்தை ஷாருக்கான் உள்ளிட்ட வீரர்கள் செல்போனில் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஷாருக்கானை பஞ்சாப் அணி ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுத்த உடனே, வீரர்கள் உற்சாகமாக விசில் அடித்துக் கொண்டாடினர். இந்த வீடியோவை தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்