"நீங்க யாரு பேசுறதுக்கு?.." 'கங்குலி'க்கு எதிராக எழுந்த குரல்.. மீண்டும் சூடு பிடிக்கும் 'கேப்டன்சி' விவகாரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில், கடந்த சில வாரங்களாக, கங்குலி - பிசிசிஐ விவகாரம், கடும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

Advertising
>
Advertising

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்காக, இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமனம் செய்திருந்தது. டி 20 போட்டிகளில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி (Virat Kohli), டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பின்னர், அதன் கேப்டன்சி பதவியில் இருந்து விலகினார். இனிமேல், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில், தலைமை தாங்குவதில் கவனம் செலுத்த போகிறேன் என்றும் கூறியிருந்தார்.

நிலைமை இப்படியிருக்க, திடீரென கோலியை ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து விலக்கி, ரோஹித் ஷர்மாவை புதிய கேப்டனாக பிசிசிஐ அறிவித்தது. இது பற்றி, பிசிசிஐ தரப்பில், அதன் தலைவர் கங்குலி, டி 20 போட்டிகளில் கோலியை  கேப்டனாக தொடர்ந்து செயல்பட அணுகினோம் என்றும், அதற்கு அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். மேலும், லிமிடெட் ஓவர் போட்டிகளில், இரண்டு கேப்டன்கள் என்பது இந்திய அணிக்கு சரி வராது என்பதால் தான், ஒரு நாள் போட்டியிலும் ரோஹித் ஷர்மாவை கேப்டன் ஆக அறிவித்தோம் எனவும் கங்குலி குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, கங்குலியின் கருத்தை மறுத்த கோலி, தன்னை டி 20 போட்டியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. மேலும், ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து தன்னை விலக்கியது கூட, கடைசி நேரத்தில் தான் தன்னிடம் அறிவிக்கப்பட்டது என கோலி தெரிவித்தார். கோலியின் இந்த கருத்தால், இந்திய அணிக்குள் குழப்பம் இருப்பது வெட்ட வெளிச்சமானது.

இந்திய அணி நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் இடையே சிறந்தவொரு தொடர்பு இல்லை என்றும் பலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதில், கோலிக்கு ஆதரவாகவும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர், திலீப் வெங்சர்கார் (Dilip Vengsarkar), கங்குலியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

'இந்த முழு விஷயமும் துரதிர்ஷ்டவசமான ஒன்று. இதனை முன்னரே, இந்திய கிரிக்கெட் வாரியம் சிறந்த முறையில் கையாண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அதே போல, பிசிசிஐ தலைவரான கங்குலி, அதன் தேர்வுக்குழு சார்பில் பேச வேண்டிய தேவையே இல்லை. அணி தேர்வு அல்லது கேப்டன்சி தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் எழுந்தால், தேர்வுக்குழுத் தலைவர் தான் பேச வேண்டும்.

இதன் முழு விளக்கத்தையும் கங்குலி தான் தெரிவித்திருந்தார். அதே போல, தனது தரப்பை கோலியும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், அது தேர்வுக்குழு தலைவருக்கும், கோலிக்கும் இடையே இருந்திருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். ஒரு கேப்டன் என்பவர், தேர்வு செய்யப்படுவதும், நீக்கப்படுவதும் அதன் குழுவின் முடிவாக இருக்க வேண்டும். அதில் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு அதிகாரம் கிடையாது.

இந்திய கிரிக்கெட் அணி உருவான நாள் முதல், அடிக்கடி கேப்டன்களை மாற்றி வருவதை நாம் பார்த்திருக்கிறோம். 5 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 பேர் கேப்டன்களாக இருந்த காலமும் உண்டு. ஆனால், இப்போது எல்லாம் மாறி விட்டது. அப்படிப்பட்ட சமயத்தில், கோலியை நீங்கள் மதித்திருக்க வேண்டும். அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய செய்துள்ளார். ஆனால், அவரை நீங்கள் கையாண்ட விதம், நிச்சயம் அவரை காயப்படுத்தியருக்கும்' என திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.

இன்னும் கோலியின் கேப்டன்சி விவாகரம் வெளிப்படையாக எதிர்கொள்ளப்படாத நிலையில், தொடர்ந்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருவது வாடிக்கையாகி உள்ளது.

VIRAT KOHLI, SOURAV GANGULY, DILIP VENGSARKAR, BCCI, கேப்டன்சி, திலீப் வெங்சர்கார், சவுரவ் கங்குலி, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்