VIDEO: ‘இப்படி ஒரு நாள் நிச்சயம் நடக்கும்’!.. 5 வருசத்துக்கு முன்னாடியே கணித்த தோனி.. திடீரென வைரலாகும் ‘பழைய’ வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பாகிஸ்தான் குறித்து பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பல வருட இந்திய அணியின் சாதனையை பாகிஸ்தான் தகர்த்துள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியே அடைந்ததில்லை. உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை 12 முறை இந்தியா-பாகிஸ்தான் மோதியுள்ளன. அதில் ஒரு போட்டியில் கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது கிடையாது. அப்படி உள்ள சூழலில் நேற்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2016-ம் ஆண்டு கூறிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், ‘11-0 என நினைக்கும்போது எங்களுக்கு பெருமையாகதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், நாங்களும் என்றாவது ஒரு நாள் தோல்வியும் அடைவோம். அது இன்றோ அல்லது நாளையோ, ஒருவேளை 10, 20 அல்லது 50 வருடங்களுக்கு பின்போ நடக்கலாம்’ என தோனி கூறியுள்ளார்.

அதாவது, விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று. இதற்கும் இரு நாட்டு அரசியல் காரணங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை தோனி மறைமுகமாக கூறியிருந்தார். தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு பலரும் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தோனி 5 வருடங்களுக்கு முன்பு கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்