‘கேப்டன் கூல்’க்கு என்ன ஆச்சு.. அடிக்கடி கோபப்பட்ட ‘தல’.. இதுதான் காரணமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே பந்து வீச்சாளர் கரண் ஷர்மாவிடம் தோனி கோபமாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று (13.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், அம்பட்டி ராயுடு 41 ரன்களும் அடித்தனர்.

இதனை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியை பொருத்தவரை கேன் வில்லியம்சன் 57 ரன்கள் அடித்தார்.

இந்தநிலையில் இப்போட்டியின் 18-வது ஓவரை கரண் ஷர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை கேன் வில்லியம்சன் பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் வில்லியம்சன் அவுட்டானார். இதனை அடுத்து பேட்டிங் ஸ்ட்ரைக்கில் நின்ற ரஷித் கான் தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரி அடித்து விளாசினார். இதனால் கோபமான தோனி உடனே ஓடி வந்து கரண் ஷர்மாவுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அந்த ஓவரில் 19 ரன்களை கரண் ஷர்மா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 19-வது ஓவரில் வைடு கொடுக்க கையை தூக்கிய அம்பயரை, தோனி கோபமாக முறைத்து பார்த்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. பொதுவாக எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூலாக காணப்படும் தோனி, நேற்றைய போட்டியில் கொஞ்சம் கோபமாகவே காணப்பட்டார். சென்னை அணியின் தொடர் தோல்விகளே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்